Enable Javscript for better performance
பொது இடங்களில் சாதிப் பெயர்கள், கொடிகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

  

  பொது இடங்களில் சாதிப் பெயர்கள், கொடிகள் அகற்றம்

  By திருநெல்வேலி,  |   Published on : 24th December 2013 04:16 AM  |   அ+அ அ-   |    |  

  திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி மோதலைத் தடுக்கும் வகையில்,  பொதுஇடங்கள், மின் கம்பங்களில் எழுதப்பட்டுள்ள சாதிப் பெயர்கள், கொடி  வண்ணங்கள் அழிக்கப்பட்டுவருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின்  இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

  திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி மோதல்கள் அவ்வப்போது நடப்பது வழக்கம்தான் என்றாலும், கடந்த சில மாதங்களாக இந்த மோதலால் உயிரிழப்பும், பொருள்சேதமும் அதிகரித்து, ஆங்காங்கே அசாதாரண நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  அண்மையில் கோபாலசமுத்திரத்தில் தர்மராஜ், ஓமநல்லூரில் முருகன், சுத்தமல்லியில் பரமசிவன், ஆலங்குளத்தில் செல்வராஜ், வைத்திலிங்கம், பூராசா ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். ஆலங்குளம் மோதலில் சிவலார்குளத்தைச் சேர்ந்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்தக் கொலைகளுக்கு சாதிரீதியிலான மோதலே பிரதான காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஆலங்குளத்தில் மூவர் கொலையைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங், அந்தக் கொலைகளில் கூலிப்படையினருக்கு தொடர்பில்லை; சாதி மோதலே காரணம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  இத்தகைய மோதல்களால் உயிரிழப்புகளுடன் அப்பகுதிகளில் அமைதியற்ற சூழல், வாழ்வாதாரம் பாதிப்பு என பல பிரச்னைகளை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏராளமான போலீஸாரை மாதக்கணக்கில் சம்பந்தப்பட்ட இடங்களில் பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது.

  மோதலின் விதை: திருநெல்வேலி மாவட்டத்தில் நகரம், கிராமம் என்கிற வித்தியாசமின்றி ஒவ்வொரு சாதிப் பிரிவினரும் சாதிக் கொடிகளை சுவர்கள், மின் கம்பங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வரைந்து, அப்பகுதியை "தங்கள் சாதியின் கோட்டை' என மறைமுகமாகச் சித்தரிப்பது பரவலாகக் காணப்படுகிறது. இந்த சாதிப் பூசலால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் அவ்வப்போது மோதல் சம்பவங்கள் ஏற்படுகின்றன. இத்துடன் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் அந்தந்த சாதித் தலைவர்களின் படங்களுடன் வைக்கப்படும் பிரமாண்ட ஃபிளக்ஸ் போர்டுகளும், அதில் இடம்பெறும் வாசகங்களும்கூட சாதி மோதல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

  எனவே, அதைத் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர்  உத்தரவின்பேரில் தற்போது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  பொது இடங்கள், மின் கம்பங்கள், அறிவிப்புப் பலகைகளில் எழுதப்பட்டிருக்கும் சாதிப் பெயர்கள், கொடிகள், வண்ணங்களை கருப்பு மையால் அழிக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றுவருகிறது.

  பல்வேறு ஊர்களில் அந்தந்தக் காவல் துறை அதிகாரிகளால் அனைத்து சமுதாயப் பிரதிநிதிகளின் கூட்டம் நடத்தப்பட்டு, இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  மணல் கடத்தல்: தாமிரவருணி ஆற்றில் மணல் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருட்டுத்தனமாக ஆற்றிலும், ஓடைப் பகுதிகளிலும் மணல் கடத்துவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

  இந்த மணல் கடத்தலும் இரு பிரிவினரிடையே  ஒருவிதமான மோதலுக்கு வித்திடுகிறது என்பதை மறுக்க முடியாது. எனவே, மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai