சுடச்சுட

    

    சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு ஆதார் அட்டை  கட்டாயமில்லை என உச்சநீதிமன்றமே உத்தரவிட்டிருந்தாலும், ஆதார் அட்டையை  கட்டாயமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன.

    மத்திய அரசின் இந்த ஆதார் அட்டையை ஆதாரமாகக் கொண்டே தமிழக அரசும்  ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் குடும்ப அட்டைகளை அச்சிட்டு வழங்கவும்  திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதில், 1.84 கோடி குடும்ப அட்டைகள் அரிசி அட்டைகளாக உள்ளன. இந்தக் குடும்ப அட்டைகளில் 85 சதவீதத்துக்கும் மேல் சமையல் எரிவாயு இணைப்புகளைப் பெற்றுள்ளன. தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் திட்டத்தால் குக்கிராமங்களிலும் எரிவாயு அடுப்புகள் வந்துவிட்டன. இதனால், எரிவாயு இணைப்பு இல்லாதே வீடுகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆதார் அட்டை: சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எரிவாயு இணைப்பு உள்ளோர் கட்டாயம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திவருகிறது. மானியம் பெற ஆதார் அட்டை அவசியமில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், நாடு முழுவதும் ஆதார் அட்டை கட்டாயத்துக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

    தமிழகத்திலும் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி முதல்கட்டமாக  பெரும்பகுதி நிறைவடைந்திருப்பதாக இந்திய தனித்துவ அடையாள ஆணைய (ஆதார்) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 7.2 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கத் திட்டமிடப்பட்டு இதுவரை 4.5 கோடி பேருக்கு புகைப்படம்  எடுத்திருப்பதாகவும், 3.7 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ளவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருவதாகவும் ஆதார் அட்டை வழங்கும் ஆணையம் அறிவித்துள்ளது.

    அரியலூரில் அதிகபட்சம்: சென்னையில் மட்டும் 52.7 சதவீதம் மக்களுக்குப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மற்ற 31 மாவட்டங்களில் 60 முதல் 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 88.8 சதவீதம் முடிந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 81.9 சதவீதமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 78.78 சதவீதமும் பணிகள் முடிந்துள்ளன.

    திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரியில் 1,44,766, சங்கரன்கோவிலில் 24,6428, வீரகேரளம்புதூரில் 93,109, தென்காசியில் 2,72,384, செங்கோட்டையில் 1,35,402, ஆலங்குளத்தில் 1,66,320, திருநெல்வேலியில் 4,05,093, பாளையங்கோட்டையில் 56,301, அம்பாசமுத்திரத்தில் 2,89,047, நான்குனேரியில் 1,55,574, ராதாபுரத்தில் 1,43,846 பேருக்கு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 28.55 லட்சம் பேருக்கு புகைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டு இதுவரை 20.39 லட்சம் பேருக்கு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. 8.16 லட்சம் பேருக்கு எடுக்கப்படாமல் உள்ளது.

    மாநிலம் முழுவதும் சராசரியாக 70 சதவீத மக்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் ஆதார் ஆணையம், தமிழகத்தில் ஆதார் எண் வழங்கும் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 31 கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் நிறுவனங்கள் நிர்ப்பந்தம்: எனவே, சமையல் எரிவாயு இணைப்புதாரர்களிடம் ஆதார் குறித்த விவரங்களைக் கேட்டு பதிவு செய்யும் பணியை எரிவாயு முகவர்கள் கட்டாயமாக்கி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 8.48 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஆதார் விவரங்கள் கோரப்படுகின்றன. ஐஓசி, பிபிசி, ஹெச்பிசி ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களின் முகவர்களாக 17 முகவர்கள் மாவட்டத்தில் உள்ளனர். அனைவருமே ஆதார் விவரங்களைக் கேட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்களின் விற்பனைப் பிரிவு வட்டாரத்தினர் கூறுகையில், ஆதார் அட்டை கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் கூறுகிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் அவற்றைக் கட்டாயமாக்கி வருகின்றன. எரிவாயு இணைப்பு உள்ள ஒவ்வொருவரும் ஆதார் குறித்த விவரம் அளித்தால் மட்டுமே மானியத்துடன் சிலிண்டர் பெறக் கூடிய நிலை விரைவில் ஏற்படும் என்றனர்.

    இது குறித்து, திருநெல்வேலி மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். நிர்மலா கூறியது: ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி முதல்கட்டத்தில் இறுதிப் பெற்றுள்ளது. விடுபட்ட அனைவருக்கும் புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேலும், கிராமம், வார்டு, தாலுகா வாரியாகவும் முகாம் நடைபெறும். அனைவருக்கும் புகைப்படம் எடுக்கும் பணி நிறைவடைந்தால் ஆதார் எண் மூலமே அரசின் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படும். மேலும், இந்த ஆதார் அட்டை விவரங்களை அடிப்படையாகக் கொண்டே தமிழகத்தில் குடும்ப அட்டையும் வடிவமைக்கப்படவுள்ளது. அதேவேளையில், ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்காதவர்களிடம் விவரம் அளித்தால் மட்டுமே மானியத்துடன் சிலிண்டர் வழங்கப்படும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்றார்.

     

    2015-ல் கையடக்க குடும்ப அட்டை?

    தமிழகத்தில் இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் தகுதிக் காலம்  31.12.2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் குடும்பத் தலைவரின்  புகைப்படத்துடன் கணினி மூலம் குடும்ப அட்டை அச்சிடும் பணி எல்காட் மூலம் கடந்த 1998-ல் தொடங்கியது. 2001-ஆம் ஆண்டு வரை சென்னையில் மட்டுமே அச்சிடப்பட்டு வந்த குடும்ப அட்டைகள் பின்னர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வழங்கல் துறை சிறப்பு மையங்களில் அச்சிடப்பட்டு வருகின்றன.

    2015-ஆம் ஆண்டுமுதல் கையடக்க குடும்ப அட்டைகளை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆதார் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கணினி பார்கோடு, குடும்பத் தலைவர் புகைப்படம் ஆகியவற்றுடன் ஏடிஎம் அட்டையைப் போன்று இந்த அட்டை வடிவமைக்கப்படவுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai