சுடச்சுட

  

  பாரம்பரிய மரபை மாண்புறச் செய்ய "வேட்டி தினம்'! கோஆப்டெக்ஸ் அழைப்பு

  By dn  |   Published on : 25th December 2013 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெசவாளர்களுக்கு தோள் கொடுக்கவும், பாரம்பரிய மரபை மாண்புறச் செய்யவும் அரசுப் பணியாளர்கள் அனைவரும் ஒருநாள் வேட்டி அணிந்து "வேட்டி தினம்'  கொண்டாடுமாறு கோஆப்டெக்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.

  தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்க (கோஆப்டெக்ஸ்) நிர்வாக இயக்குநராகப் பதவியேற்ற பிறகு, உ. சகாயம் கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். இயற்கைச் சாயம் தோய்த்து ஆரோக்கியா கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்தார்.

  இதனிடையே, அவர் "வேட்டி தினம்'  கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

  பாரம்பரிய அடையாளம் வேட்டி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றின் வழித்தடத்தில் ரோமானியர்களுக்கு ஆடை அனுப்பி நாகரிகத்தின் நளினத்தை வெளிப்படுத்தியவர்கள் தமிழர்கள். அத்தகைய ஆடைப் பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் அடையாளமாய் நீண்ட காலமாக நின்று நிலைத்தது வேட்டி. வேட்டி அணிவது தமிழர்களின் ஆடை மரபின் அழகான வெளிப்பாடு. பாரம்பரியத்தின் பகட்டு, மனிதனின் மானம் காத்தது மட்டுமன்றி மண்ணின் மணத்தை மாண்புறச் செய்ததும் வேட்டிதான்.

  இன்றைய நவீன நாகரிகச் சூழலில் வேட்டி அணிவது குறைந்துவிட்டது. கம்பீரமான வேட்டியைக் காணமுடியவில்லை. வேட்டி என்பது வெறும் ஆடையின் அம்சம் மட்டுமல்ல, எளிய நெசவாளர்களின் வியர்வையின் வெளிப்பாடு; உழைப்பின் உன்னதம். வேட்டி என்கிற ஆடை மரபை ஆராதிக்கவும், வலுப்படுத்தவும் அதைத் தொய்வில்லாமல் நெசவு செய்யும் நெசவாளர்களுக்கு தோள் கொடுக்கவும், "வேட்டி தினம்'  கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

  வேட்டி தினம்: வேட்டி அணிவது மரபை மதிக்க மட்டுமல்லாமல், அதன் மருத்துவ மகத்துவத்தை உணர்த்தவும், தமிழர்களின் மரபு விழாவாம் பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாக 2014 ஜனவரியில் ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து வேட்டி தினமாகக் கொண்டாடுங்கள்.

  ஒவ்வொரு துறையில் பணி செய்யும் அனைத்துப் பணியாளர்களின் விருப்பத்துடன் வேட்டி அணிந்து மரபின் மாண்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம். இதன் மூலம் ஏழை நெசவாளர்களின் வாழ்வுக்கு வழி செய்யவும், கோஆப்டெக்ஸின் விற்பனைக்கு உதவவும்கூடிய இத் திட்டத்துக்கு ஆதரவு தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

  இந்த சுற்றறிக்கை ஆட்சியர்கள், ஒவ்வொரு துறையின் உயர் அதிகாரிகள் என அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  "வேட்டி தினம்' கொண்டாடும் வகையில் அனைத்து வடிவங்கள், வண்ணங்களில் அனைத்து ரக நூலில் சிறிய, பெரிய கரையுடன் கூடிய ரகங்களை கோஆப்டெக்ஸ் உற்பத்தி செய்துள்ளது. ரூ. 130 முதல் ரூ. 500 வரையிலான ரகங்கள் உள்ளன. தேவையான வேட்டிகளை அந்தந்தப் பகுதியில் இயங்கும் கோஆப்டெக்ஸ் மூலம் விநியோகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai