Enable Javscript for better performance
அகவிலைப்படி உயர்த்த கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் 30-ல் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    அகவிலைப்படி உயர்த்த கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் 30-ல் முற்றுகை

    By திருநெல்வேலி  |   Published on : 26th December 2013 03:53 AM  |   அ+அ அ-   |    |  

    திருநெல்வேலியில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்க (சிஐடியூ) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 10 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்காத போக்குவரத்துக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து டிச. 30-ஆம் தேதி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் எஸ். வின்சென்ட் தலைமை வகித்தார். பொதுச் செயலர் எஸ். பெருமாள், பொருளாளர் எம். சுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் ஹரிகுமார், முத்துக்கிருஷ்ணன், சிவதானுதாஸ், இணைச் செயலர்கள் காமராஜ், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், தமிழகத்தின் அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் ஜூலை 2013-இல்  அறிவிக்கப்பட்ட 10 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி இன்னமும் உயர்த்தப்படவில்லை. மேலும் 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை.

    கடுமையான விலைவாசி உயர்வினால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதிலும், நிர்வாகம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

    எனவே அகவிலைப்படியை உயர்த்தி வழங்காததைக் கண்டித்து, டிச. 30-ஆம் தேதி வண்ணார்பேட்டையில் உள்ள நிர்வாக இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai