சுடச்சுட

    

    ஆலங்குளத்தில் 3 பேர் கொலை வழக்கு:நெல்லை நீதிமன்றத்தில் 6 பேர் சரண்

    Published on : 27th December 2013 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆலங்குளத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மேலும் 6 பேர் திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்-1-ல் வியாழக்கிழமை சரணடைந்தனர்.

    ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரில் கடந்த 14-ஆம் தேதி, தி.மு.க. பிரமுகர் பூல்பாண்டியன் உள்ளிட்ட 4 பேரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது.

    இதற்கு பழிவாங்கும்விதமாக, அதே நாளில் நல்லூரைச் சேர்ந்த செல்வராஜ், வைத்திலிங்கம், பூராசா ஆகிய 3 பேர் 25 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

    இதனால் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இவ் வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஒரு பெண் உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர். 2 பேர் மதுரை மேலூர் நீதிமன்றத்திலும், ஒருவர் சங்கரன்கோவில் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். மேலும் 14 பேரை ஆலங்குளம் போலீஸார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இவ் வழக்கு தொடர்பாக, சிவலார்குளத்தைச் சேர்ந்த பெரியமுத்து மகன் ஆனந்த் என்ற வெள்ளைபாட்ஷா (31), முருகன் மகன் சுப்புராஜ் (எ) மூக்காண்டி, சீனிசாமி மகன் சேகர் (27), வெள்ளத்துரை மகன் ஆனந்த்குமார் (28), முருகன் மகன்கள் செந்தில் (28), ஆனந்த் (24) ஆகியோர் திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-ல் வியாழக்கிழமை சரண் அடைந்தனர். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் ராமலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேரையும் இம் மாதம் 30-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும், அதன்பின்பு தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக மேலும் 6 பேரை ஆலங்குளம் போலீஸார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai