சுடச்சுட

    

    கூடங்குளத்தில் 425 மெகாவாட் மின் உற்பத்தி

    By திருநெல்வேலி  |   Published on : 27th December 2013 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடங்குளம் முதல் அணுஉலையில் வியாழக்கிழமை காலை 425 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தென் மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீராவியை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது.

    ரஷிய நிதியுதவியுடன் மத்திய அரசு மூலம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட இந்த உலைகளில் முதலாம் உலையில் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி காலை 2.45 மணிக்கு டர்பைன் இயக்கப்பட்டு 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

    நவம்பர் 4-ஆம் தேதி மின் உற்பத்தி 230 மெகாவாட் ஆக அதிகரித்தது. பின்னர், நவம்பர் 29-ஆம் தேதி 400 மெகாவாட் ஆக அதிகரித்தது. டிசம்பர் 10-ஆம் தேதி 280 மெகாவாட் ஆக இருந்தது. இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை (டிசம்பர் 26) 425 மெகாவாட் உற்பத்தி செய்யப்ட்டது.

    இதுதொடர்பாக, கூடங்குளம் அணுஉலை திட்ட இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் கூறியது:

    கூடங்குளம் முதல் அணுஉலையில் இப்போது 425 மெகாவாட் மின் உற்பத்தி  செய்யப்படுகிறது. இதுவரை இந்த உலையில் 35 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுமையாக தென் மத்திய தொகுப்பில் காலை 10.35 மணிக்கு இணைக்கப்பட்டது.

    நீராவி வெளியேற்றும் பணி: முதல் உலையின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கத் தேவையான சோதனைகளும், நீராவி வெளியேற்றும் பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது. நீராவி வெளியேறும்போது அதிக அளவில் சப்தம் இருக்காமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இதற்காக 3 முதல் 5 நிமிடங்களுக்கு மட்டும் நீராவி வெளியேற்றப்படுகிறது. மேலும், பகல் நேரத்தில் மட்டுமே இந்த நீராவியை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை.

    சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலோ, பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலோ எந்தவித பரிசோதனையும் அணுஉலையில் நடைபெறவில்லை. அனைத்துப் பணிகளுமே பாதுகாப்பாகவும், சோதனைகள் அனைத்தும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் ஒப்புதலின்படியே நடைபெறுகிறது.

    மேலும், உலையில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரமானது, பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் தெற்கு மண்டல மின் ஏற்றி, இறக்கு மையத்தின் ஒப்புதலைப் பெற்றே மத்திய தொகுப்பில் இணைக்கப்படுகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai