சுடச்சுட

    

    தூய யோவான் கல்லூரி விவகாரம் அமைதிப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

    By திருநெல்வேலி,  |   Published on : 27th December 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூய யோவான் கல்லூரி விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கல்லூரி நிர்வாகம் வராததால், பேச்சுவார்த்தை ஜன. 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    தூய யோவான் கல்லூரியில் இடைநீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்கள் விதிமுறைகளின்படி 2 மாதத்துக்குப் பிறகு, கடந்த வாரம் பணியில் சேர்ந்து பாடம் நடத்தினராம். ஆனால், கல்லூரி நிர்வாகத் தரப்பில் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் திருத்தம்  செய்து, 2 ஆசிரியர்களையும் வெளியேற்றி விட்டதாகக் கூறப்படுகிறது.

    சம்பவம் குறித்து கல்லூரி முதல்வரிடம் கேள்வி எழுப்பிய மூட்டா சங்க நிர்வாகிகள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களைத் தாக்கி, கல்லூரியில் இருந்து வெளியேற்றிய சம்பவம் தொடர்பாக மூட்டா தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

    ஆசிரியர்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், கல்லூரி முதல்வர் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மூட்டா கிளைச் செயலர்  ஆன்ட்ரூஸ் கைது செய்யப்பட்டார். மேலும், 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தால் இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு கோட்டாட்சியருக்கு ஆட்சியர் மு. கருணாகரன் உத்தரவிட்டார்.

    இதன்படி, கல்லூரி நிர்வாகம், மூட்டா, கல்லூரிக் கல்வி இயக்குநரகம், காவல்துறை ஆகியோரடங்கிய அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டம், டிச. 26-ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அனைத்துத் தரப்புக்கும் கோட்டாட்சியர் சீனிவாசன் பெயரில் சம்மன் அனுப்பப்பட்டது.

    வியாழக்கிழமை இக்கூட்டத்துக்காக மூட்டா சார்பில் அதன் நிர்வாகிகள் சுப்பாராஜு, முருகேசன், நவநீதகிருஷ்ணன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அன்னம்மாள், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் ஆகியோர் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜராயினர். ஆனால், கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. 

    கல்லூரிக்கு அனுப்பிய சம்மனை யாரும் வாங்கவில்லையாம். இதையடுத்து, ஜன. 2-ஆம் தேதிக்கு விசாரணையை கோட்டாட்சியர் ஒத்திவைத்தார். 2-ஆம் தேதி நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையிலும் கலந்துகொள்ளாவிட்டால், கல்லூரி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூட்டா பொதுச்செயலர் சுப்பாராஜு வலியுறுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai