சுடச்சுட

    

    நெல்லையில் தேசிய கணிதப் பயிலரங்கு தொடக்கம்

    By திருநெல்வேலி,  |   Published on : 27th December 2013 02:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கணிதப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பாக தேசிய அளவிலான கணிதப் பயிலரங்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.

    திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகமும், தூய சவேரியார் கல்லூரியும் இணைந்து  இந்தப் பயிலரங்கை நடத்துகின்றன. தேசிய அணுசக்திக் கழகத்தின் கீழ் இயங்கும், தேசிய உயர் கணித கல்விக் குழு சார்பில் கடந்த 23 ஆண்டுகளாக இந்தப் பயிலரங்கு  நடத்தப்பட்டுவருகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்தப் பயிலரங்கு தமிழகத்தில் முதன்முறையாக ஒரு வாரம் நடத்தப்படுகிறது.

    தேசிய உயர் கணித கல்விக் குழுவின் நிதியைப் பெற்று, மத்தியப் பல்கலைக்கழகம், தூய சவேரியார் கல்லூரி ஆகியவற்றின் பங்களிப்புடன் சேர்த்து இக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

    இதற்காக தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பிஎஸ்சி கணிதம் 2, 3-ஆம் ஆண்டு பயிலும் 400 மாணவர், மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், அவரவர் 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், பிஎஸ்சி முதலாண்டில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 62 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு தங்கும் வசதி, போக்குவரத்துச் செலவு, உணவு, புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் தொடக்க விழா தூய சவேரியார் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி. சஞ்சய் பேசியது:

    கணிதத்தில் மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளவும், திறனாய்வு ஆற்றலை ஊக்குவிக்கவும் இப் பயிலரங்கு நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியானது  மாணவர்களின் உயர்கல்விக்கும், ஆராய்ச்சிப் படிப்புக்கும் பெரிதும் உதவியாக அமையும். மேலும், கணிதத் துறையில் பல்வேறு ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் வெளிக் கொணர அடித்தளமாக அமையும். பல்கலைக்கழகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் இணைந்து செயல்படுவதன் மூலம் உயர்கல்வி வளர்ச்சிக்கும் ஊன்றுகோலாக அமையும். இந்தப் பயிற்சி வகுப்புகளை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    கல்லூரிச் செயலர் ஜே.எம். தாஸ், முதல்வர் கில்பர்ட் கமிலஸ், பேராசிரியர்கள் சோமசுந்தரம், சீனிவாசன், அதிசயநாதன்,  ஆரோக்கியசாமி, ஆன்டோ கின்ஸ்லி ஆகியோர் பயிலரங்களின் நிகழ்வுகள், நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.

    பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களாக மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.பி.ரமேஷ், சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் லூர்துசாமி ஆகியோர் செயல்படுகின்றனர். வரும் 31-ஆம் தேதி மாலை இதன் நிறைவு விழா நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai