சுடச்சுட

    

    "385 ஒன்றியங்களிலும் வறுமை ஒழிப்புப் பணிகள் தீவிரம்'

    By திருநெல்வேலி  |   Published on : 28th December 2013 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வரின் தொலைநோக்குத் திட்டத்தின்படி 2023-ல் தமிழகத்தை வறுமையில்லா மாநிலமாக மாற்ற 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் வறுமை ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் மைதிலி கே. ராஜேந்திரன்  தெரிவித்தார்.

    மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான துறை  அலுவலர்களுக்கான திட்ட விளக்கக் கருத்தரங்கம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கருத்தரங்கில் மைதிலி கே. ராஜேந்திரன் பேசியது:

    தமிழகத்தில் 2005-ல் புதுவாழ்வுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத் திட்டம் குறிப்பிட்ட இலக்குக்கு முன்னதாகவே வெற்றிபெற்று இலக்கை விஞ்சி சாதனை புரிந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் வறுமை ஒழிப்புப் பணிகளைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, 2012-ல் தமிழகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டது.

    கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். குறிப்பாக,  நகர்ப்புறங்களுக்கு இணையாக அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருதல்,  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருதல், அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தல், சுகாதார வசதி, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், சுயதொழில் தொடங்க கடனுதவி, குழுக்கள் அமைத்து நிதியுதவி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஆதாரமாகக் கொண்டே இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல்கட்டமாக 120 ஊராட்சி ஒன்றியங்களிலும், இரண்டாவது கட்டமாக 265 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்டமாக நான்குனேரி, ராதாபுரம், பாளையங்கோட்டை, வள்ளியூர், கடையம், கீழப்பாவூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் 146 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    2014-15-ஆம் ஆண்டில் இரண்டாவது கட்டமாக ஆலங்குளம், களக்காடு, தென்காசி, பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை, சேரன்மகாதேவி ஆகிய 7 ஒன்றியங்களில் 104 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

    2023-க்குள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் வேலைவாய்ப்பு இன்றியோ, கல்வி, சுகாதாரம், இருப்பிட வசதியின்றியோ இருக்கக் கூடாது என்ற நிலையை எட்டும் வகையில் பணியாற்றப்படும் என்றார் அவர்.

    திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் பேசியது:

    நியாயவிலைக் கடைகளில் பெண்கள் கூட்டமே அதிகம் காணப்படும். ஏனெனில், குடும்பத்தைத் திறம்பட வழிநடத்துவது பெண்கள்தான். அத்தகைய பெண்கள் உறுப்பினர்களாக உள்ள சுயஉதவிக் குழுக்களை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் ஊரக வாழ்வாதார இயக்கமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

    கிராமப்புறங்களில் ஏழை, எளிய, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், அனைத்து அடிப்படை வசதிகளை செய்துதரவும் இத் திட்டத்தில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

    இத் திட்டத்தில் சங்கம் தொடங்கப்பட்டவுடன் அந்தந்த ஊராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு தகுந்தபடி ரூ.25,000, ரூ.35,000, ரூ.45,000 என விடுவிக்கப்படுகிறது.  மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் 34 ஊராட்சிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், 60 ஊராட்சிகளுக்கு தலா ரூ.35 ஆயிரம், 52 ஊராட்சிகளுக்கு ரூ.45 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.

    கூட்டத்தில், புதுவாழ்வுத் திட்ட கூடுதல் திட்ட இயக்குநர் ஷஜீவனா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கே. குருநாதன், புதுவாழ்வுத் திட்ட மேலாளர் எஸ்.கே. சம்பத்குமார் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai