சுடச்சுட

    

    பாஜக, காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க திமுக வியூகம்: மு.க.ஸ்டாலின்

    By கடையநல்லூர்,  |   Published on : 29th December 2013 02:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காங்கிரஸ், பாரதிய ஜனதா இல்லாத வெற்றிக் கூட்டணியை உருவாக்க திமுக தலைவர் கருணாநிதி வியூகம் வகுத்து வருகிறார் என, மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார்.

    திமுக பொதுக்குழு தீர்மான விளக்கம் மற்றும் அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடையநல்லூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிவந்த 2 மணி நேர மின்வெட்டை முற்றிலுமாக நீக்கி மின்மிகை மாநிலமாக உருவாக்குவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் ஆட்சியைப் பிடித்த அதிமுக, இன்று வரை அதை நிறைவேற்றவில்லை. மாறாக, இப்போதைய மின்வெட்டுக்கு மத்திய அரசும், கருணாநிதியும்தான் காரணம் என ஜெயலலிதா கூறி வருகிறார்.

    திமுக ஆட்சியில் ரூ.26,624 கோடி மதிப்பீட்டில் 7,798 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கான பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.  இத்திட்டங்களை முறையாக அதிமுக அரசு செயல்படுத்தினாலே மின்வெட்டு சரிசெய்யப்பட்டிருக்கும். ஆனால், திமுகவுக்கு நல்ல பெயர் வரக்கூடாது என்பதற்காக அத்திட்டங்களை எல்லாம் அதிமுக முடக்கியதால்தான் மின்வெட்டினை சரிசெய்ய முடியவில்லை.

    அதிமுக தேர்தல் வாக்குறுதியில் 2012-க்குள், தமிழகத்திலுள்ள 151 நகராட்சி மற்றும்  மாநகராட்சிகளிலிருந்து வெளியாகும் கழிவுகளைக் கொண்டு 1000 மெகாவாட்  மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றுவரை ஒரு மெகாவாட் மின்சாரம்கூட உற்பத்தி செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

    இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்கியது திமுக. மேலும் அவர்களுக்காக நலவாரியத்தை உருவாக்கியதும் திமுகதான். இதன்மூலம் பல ஆயிரம் இஸ்லாமியர்கள் பலன் பெற்றுள்ளனர்.

    வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இல்லாத மக்கள் விரும்பும் கூட்டணியை கருணாநிதி ஏற்படுத்தி வருகிறார். அந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றார் ஸ்டாலின்.

    கூட்டத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள், பாலங்கள், குடிநீர்த்  திட்டங்களை பட்டியலிட்ட ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நடந்த கொலை, கொள்ளை குறித்த விவரங்களையும் தேதி வாரியாக பட்டியலிட்டார். கூட்டத்துக்கு ச.தங்கவேலு எம்.பி. தலைமை வகித்தார்.

    மாவட்டச் செயலர் வீ.கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை,  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சென்னை முன்னாள் மேயர் சுப்பிரமணியன்,  சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா.ஆவுடையப்பன், டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர்  சைபுன்னிஷா சேகனா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செரீப், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, முன்னாள் துணைமேயர் முத்துராமலிங்கம், கடையநல்லூர் நகரச் செயலர் முகமதுஅலி, ஒன்றியச் செயலர் காசிதர்மம் துரை, வார்டு செயலர் சேகனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அதிமுக, சமத்துவ மக்கள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai