சுடச்சுட

    

    "விவேகானந்தரின் கனவை நனவாக்க இளைஞர் சக்தி அணி சேர வேண்டும்'

    By திருநெல்வேலி,  |   Published on : 30th December 2013 02:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவேகானந்தரின் கனவை நனவாக்க இளைஞர் சக்தி அணி சேர வேண்டும் என, சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநிலத் துணை அமைப்பாளர் இரா. ஸ்ரீநிவாசன் வலியுறுத்தினார்.

    தமிழ்நாடு ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு சார்பில் பாலையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஜயந்தி விழாவில் அவர் பேசியது:

    மேலைநாடுகளில் விவேகானந்தர் ஆற்றிய எழுச்சி உரைகள்தாம் இன்றளவும்  இந்தியாவின் பெருமைகளை பார் அறியச் செய்துள்ளன. நாட்டில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு விழிப்புணர்வு அளித்து எழுமின், விழுமின், குறிசாரும் வரை அயராது உழைமின் என்று அறைகூவல் விடுத்தவர். ஆன்மிகம், கல்வி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் எழுச்சி பெற எண்ணற்ற பணிகளை ஆற்றியவர். தீண்டாமைக்கு எதிராக கடுமையாகப் போராடியவர் விவேகானந்தர். இளைஞர்கள் விவேகானந்தரின் பாதையில் வழிநடத்தப்பட வேண்டியது அவசியமானது. பாரத நாட்டின் பெருமையை பார் அறியச் செய்யவும், இளைஞர் சக்தியை ஒன்றுதிரட்டவும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். 40 வயதுக்கு உள்பட்டோர் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடாக இந்தியா உள்ளது. எனவே, இளைஞர் சக்தியை ஒன்றுதிரட்டுவதன் மூலம் விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க முடியும் என்றார்.

    விஜயபாரதம் தேசிய வார இதழ் ஆசிரியர் நெல்லை மா. வீரபாகு பேசுகையில், விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, கடந்து வந்த பாதை, ரயில் பயணங்கள், தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள், விவேகானந்தர் பெயர் காரணம் குறித்து விளக்கிப் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு, கே. சந்திரசேகர் தலைமை வகித்தார். எஸ்.கே. சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஅழகியமன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோயில் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai