சுடச்சுட

  

  திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 10,403 பெண்களுக்கு ரூ.30 கோடியில் திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கம் தலா 4 கிராம்  வழங்கப்பட்டுள்ளதாகஇந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற,  பெண்களுக்கு தங்கத்துடன் திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:வறுமை காரணமாக ஏழைப் பெண்களின் திருமணம் நின்றுவிடக் கூடாது என்பதற்காகவே தாலிக்கு தங்கத்துடன், திருமண உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திவருகிறார். இந்தத் திட்டத்தில், பட்டதாரி பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், 10, 12-ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 10,403 பேருக்கு ரூ.30 கோடியில் திருமண நிதியுதவியும், தலா 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்தொகை பெற பெண்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு வரை கல்வி பெறும் நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம் பெண் கல்வி மேம்பட்டு வருகிறது என்றார்.

  ஆட்சியர் மு.கருணாகரன் பேசியது: கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம்  மேம்படுவதற்காக கறவைப் பசு, ஆடுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.  மாவட்டத்தில்  இதுவரை 1,443 பேருக்கு ரூ.4.93 கோடியில் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. 15,030 பேருக்கு ரூ.15.50 கோடியில் தலா 4 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களை வளர்ச்சி பெறச் செய்திட "தாய்' திட்டம் மூலம் ரூ.57.21 கோடியில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அரசின் அனைத்துத் திட்டங்களையும் அறிந்து அதில் முழுமையாகப் பயன்பெற பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.

  விழாவில், 318 பட்டதாரி பெண்களுக்கு தலா 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரமும், 498 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம், 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. அம்பேத்கர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எஸ். முத்துக்கருப்பன், மாநகராட்சி மேயர் விஜிலா சத்தியானந்த், எம்எல்ஏ-க்கள் முத்துச்செல்வி, துரையப்பா, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai