சுடச்சுட

  

  அபாய நிலையில் ஈரடுக்கு மேம்பால தடுப்புச் சுவர்!

  By திருநெல்வேலி,  |   Published on : 31st December 2013 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

  40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தப் பாலமானது திருநெல்வேலியின் மையப் பகுதியில் உள்ளது. இந்தப் பாலத்தைக் கடந்தே திருநெல்வேலி நகரம், தென்காசி, புளியங்குடி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. அண்மையில்தான் இந்தப் பாலத்தைப் புனரமைக்க கீழ் பாலத்தில் மட்டும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால், மேல்மட்ட பாலத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

  இதன்காரணமாக மேல்மட்ட பாலத்தின் தடுப்புச் சுவரின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுகின்றன. கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வு காரணமாக இந்தப் பூச்சுகள் மேலிருந்து கீழே விழுவதும், கீழே செல்வோர் மீது

  பூச்சுகள் விழுந்து காயம் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

  மேலும், பெரும்பாலான பகுதியில் சிமென்ட் பூச்சு முழுவதும் விழுந்து இரும்புக் கம்பிகள் மட்டுமே காட்சியளிக்கின்றன. இந்தப் பகுதியில் வேகமாக வரும் வாகனங்கள் தவறினால் கீழே விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

  கீழ்பாலத்தின் ஏறும் பகுதியில் ஜல்லிகற்கள் மட்டும் கொட்டப்பட்டு சிமென்ட் பூசப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக் காலங்களில் தண்ணீர் தெப்பம்போல தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

  பாலத்தில் புனரமைப்புப் பணிகளை நடைபெறாத நிலையில், வேலைக்காக ஒப்பந்தம் கோரப்பட்டு பல லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது என தேமுதிக புகார் கூறியுள்ளது.

  மேலும், பாலத்தை பராமரிப்பதைவிட இந்தப் பாலத்தில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளை கிடைக்கும் இடத்தில் எல்லாம் வைத்து வருமானம் ஈட்டுவதில் மட்டும் நெடுஞ்சாலைத் துறை அதிக அக்கறை செலுத்தி வருகிறது எனவும் அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

  இந்தப் பாலத்தை புனரமைக்க வேண்டும் என, தேமுதிக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் முகமது அலி தலைமையில் அக் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் தேமுதிக அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai