சுடச்சுட

  

  இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சி திமுக, அதிமுகவினர் மோதலால் வெயிலில் தவித்த பொதுமக்கள்

  By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 31st December 2013 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சியில் திமுக, அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால், பொதுமக்கள் வெயிலில் காத்திருக்க நேரிட்டது.

  தென்திருப்பேரை பேரூராட்சி யில் இலவச மிக்ஸி, கிரைண்டர் மற்றும்  மின்விசிறி வழங்கும் விழா சமுதாய நலக் கூடத்தில்  திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, சமுதாய நலக் கூடத்தின் முன் பேரூராட்சித் தலைவர் ராமஜெயம் (திமுக) ஏற்பாட்டின்பேரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலேயே பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவில் பந்தல்காரர் திடீரென அந்தப் பந்தலை அகற்றியுள்ளார்.

   திங்கள்கிழமை நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு பேரூராட்சித் தலைவர் ராமஜெயம், துணைத் தலைவர் ஆனந்த் ஆகியோரது தலைமையில் வந்த திமுகவினர் பந்தல் பிரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, அதிமுகவினரின் தூண்டுதலின்பேரிலேயே பந்தல் அகற்றப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினர்.

  அதிமுக அரசின் சாதனைத் திட்டமான இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவினர் பங்கேற்கக் கூடாது எனக் கூறி அதிமுகவினர் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  இதையடுத்து, காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் இரு பிரிவினரிடமும் பேச்சு நடத்தி,  அரசு நிகழ்ச்சி என்பதால் இரு கட்சியினரும் கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த பேரூராட்சித் தலைவர் ராமஜெயம்,  மக்கள் வெயிலில் காத்திருக்கக் கூடாது என்பதற்காகப் போடப்பட்ட பந்தலைப்  பிரித்தது தவறானதாகும். மேலும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தடைவிதிக்க முடியாது என்றார்.

  பின்னர், பேரூராட்சித் தலைவரும், அதிமுக சார்பில் நகரச் செயலர் சிவலிங்கமும்  நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படியும், மற்றவர்கள் கலைந்து செல்லும்படியும் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் எச்சரித்தார்.

  இந்த மோதலால் நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருந்து இலவச மிக்ஸி, கிரைண்டரை பெற்றுச் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai