தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அம்மா உணவகங்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரவருணியைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மத்திய அரசு உயர்த்தியுள்ள ரயில்கட்ட உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியான கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரட்டை ரயில்பாதை என்னும் திட்டத்தையும், நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டத்தையும் அமைக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின்பும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இது குறித்து தமிழக மக்களின் குரல் ஓங்கி ஒலித்திடும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் அம்மா உணவகங்களை வரவேற்கிறோம். ஆனால், அதற்கான நிதி இப்போது மாநகராட்சியில் இருந்து செலவழிக்கப்படுகிறது. ஏற்கெனவே பல மாநகராட்சிகளிலும் பட்ஜெட் பற்றாக்குறை நிலையில் உள்ளபோது, அம்மா உணவகத் திட்ட செலவினத்தையும் அவர்கள் மீது சுமத்தக் கூடாது. அம்மா உணவகங்களுக்காகத் தனி நிதியை ஒதுக்க வேண்டும். தாமிரவருணியைப் பாதுகாக்கக் கோரி எங்களது கட்சி சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் முஹம்மது முபாரக், மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் உஸ்மான்கான், மாவட்டச் செயலர்கள் ஹயாத், சிந்தா, பொருளாளர் சாதிக், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் நசீர்கான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.