தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மதவழி சிறுபான்மையின மாணவர், மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தமிழக சிறுபான்மையினர் நல ஆணையர் அ. முகமது அஸ்லாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வசிக்கும் மதவழி சிறுபான்மையினரான கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மத்திய அரசால் வழங்கப்படும் இந்த உதவித்தொகை பெற ஆன்லைனில் ஜ்ஜ்ஜ்.ம்ர்ம்ஹள்ஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்கும் நபர்கள் 30.9.2014 ஆம் தேதிக்குள்ளும், புதுப்பிக்கும் நபர்கள் 15.11.2014 தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர், மாணவிகள் கடந்த பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி, வருமானச் சான்று ஆகியவற்றின் நகலுடன், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களை இணைத்து அவரவர் பயிலும் கல்வி நிலையங்களில் புதிதாக உதவித்தொகை பெறுபவர்களாக இருந்தால் 10.10.2014-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். புதுப்பிக்கும் மாணவர்கள் 20.11.2014-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை அவரவர் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும் என்பதால் கட்டாயம் வங்கிக் கணக்கு தொடங்கி அதன் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர், மாணவிகள் செலுத்தும் முழுக் கட்டணமும் திரும்ப வழங்கப்படும். இதர கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு விடுதியில் தங்கிப் பயின்றால் ரூ.30 ஆயிரம், இதர மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும். மாணவர்களிடம் விண்ணப்பத்தை பெறும் கல்வி நிலையங்கள் அவற்றை பரிசீலனை செய்து புதியவைக்கு 20.10.2014-க்குள்ளும், புதுப்பித்தலுக்கு 25.11.2014-க்குள்ளும் சிறுபான்மையினர் நல ஆணையர், 807, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு 044-28523544, 28520033 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.