நெல்லை மாவட்ட கவிஞர் பேரவை, சென்னை கவிதை உறவு (நெல்லை கிளை) சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கவிதைப் போட்டி திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கவிஞர் பேரவையின் தலைவர் பே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகள், பொதுமக்களுக்கு இப் போட்டிகள் நடத்தப்படுகிறது. திருநெல்வேலி நகரம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்குப் போட்டித் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்பவர்கள் 16 வரிக்கு மிகாமல் மரபுக்கவிதை, புதுக்கவிதை எழுதலாம். ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்படும். வெற்றிபெறுபவர்களுக்கு மாலை 4 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.