திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறையில் வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின. கோப்புகள் தீயில் எரியாமல் அதிர்ஷ்டவசமாக தப்பின.
திருநெல்வேலி நகரத்தில் சுவாமி நெல்லையப்பர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இதன் தரைத் தளத்தில் மாநகராட்சி மேயர், ஆணையர், செயற்பொறியாளர், சிறுகூட்ட அரங்குகள் உள்ளன. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் அர.லட்சுமி, வியாழக்கிழமை காலையில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை அறையில் இருந்துள்ளார். அதன்பின்பு உணவு இடைவேளைக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது,அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியதாம். உடனே அறை முழுவதும் பரவிய தீயை மாநகராட்சி பணியாளர்களும் பொதுமக்களும் அணைக்க முயன்றனர்.
மாநகராட்சி செயற்பொறியாளர்கள் நாராயணன்நாயர், உதவி ஆணையர் கருப்பசாமி உள்ளிட்டோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் கோப்புகளையும், பொருள்களையும் அப்புறப்படுத்தினர்.
தகவலறிந்ததும் பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் மாநகராட்சி ஆணையர் அறையில் இருந்த கணினி, பிரிண்டர், நாற்காலிகள், மேஜை உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமானதாகக் கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.