ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் நடைபெற்ற கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஜெ.எஸ். ரிபாயி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவர் எஸ். மில்லத் இஸ்மாயில், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அப்துல் வாஹித், ஷாஜஹான், சேக்மைதீன், மீரான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அனைத்துத் தரப்பு மக்களையும் நேரடியாகப் பாதிக்கும் வகையிலான ரயில் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
ரம்ஜான் நோன்பு தொடங்க இருப்பதால் அரசு மூலம் அனைத்துப் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் அரிசியை உரிய நேரத்தில் வழங்குவதுடன், கூடுதலாக சர்க்கரை, மைதா, பாமாயில் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். ரம்ஜானை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களிலும் சிறப்பு சங்கொலி எழுப்ப
வேண்டும்.
தாமிரவருணி ஆற்றில் மணல் அள்ளுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதுடன், ஆற்றில் எந்த வகையிலும் கழிவுகள் கலக்காமல் தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.