திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் 35 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறுவோர் நலனுக்காகவே ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்களிடம் குறைகளை முன்கூட்டியே மனுக்களாகப் பெற்று அவற்றை அந்தந்த துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறைதீர் கூட்டத்தில் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இன்றைய கூட்டத்துக்காக ஏற்கெனவே 35 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களால் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 35 மனுக்கள் மீதும் தீர்வு காணப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை வாரம்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களாக அளிக்கலாம். உடனுக்குடன் நிவர்த்தி செய்துதரப்படும் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், ஓய்வூதியர் நல இயக்குநரக இணை இயக்குநர் டி. குணராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் த.வெள்ளைத்துரை, ரேவதி, மாவட்ட கருவூல அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் டோரா உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.