திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே தனியார் ஆலை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக திங்கள்கிழமை இரவு 2 பைக்குகள் தீவைத்து எரிக்கப்பட்டன. வீடுகளும் கல்வீசி சேதப்ப டுத்தப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சேர்ந்தவர் ஜஸ்டின்பாபு. இவர் காவல்கிணறு அருகே கிரஷர் ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் களியக்காவிளையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு ரூ.4.5 கோடிக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாம்.
இதற்கு முன்பணமாக மணிகண்டனிடம் ரூ.1 கோடியை ஜஸ்டின்பாபு பெற்றிருந்தாராம். மீதி பணத்தை ஆறு மாதங்களில் கொடுத்து விடுவதாக ஒப்பந்தத்தில் தெரிவித்திருந்தாராம். இதையடுத்து கிரஷர் ஆலையை மணிகண்டன் நடத்திவந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் கிரஷர் ஆலையில் ஏற்கெனவே வேலை செய்து வந்த ஊழியர்களை நீக்கி வந்தாராம். இதற்கு அந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்து வந்தனர்.
இந்த கிரஷர் ஆலையில் பாதுகாப்பு கண்காணிப்பாளராக ஆவரைகுளம் அருகே உள்ள பிள்ளையார்குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டனும், கூடங்குளம் அருகே உள்ள சவுந்திரலிங்கபுரத்தைச் சேர்ந்த சிவமிராசுவும் வேலை செய்து வருகின்றனர்.
ஒப்பந்தக் காலம் முடிவடைந்த நிலையில் மணிகண்டன் ஜஸ்டின்பாபுவுக்கு மீதி பணத்தை கொடுக்கவில்லையாம். இதனால் ஜஸ்டின்பாபு மீதி பணத்தை தரவேண்டும் அல்லது கிரஷரை திருப்பித் தருமாறு கூறினாராம். இதற்கிடையே ஜஸ்டின்பாபுவுக்கும், மணிகண்டனுக்குமிடையே திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டதாம்.
அன்று இரவு 10-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென ஆவரைகுளம் அருகே உள்ள பிள்ளையார்குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை தீவைத்து எரித்தனராம். பின்னர் மணிகண்டன் வீட்டின் மீது கல்வீசித் தாக்கி சேதப்படுத்தினராம். இதையடுத்து அந்த கும்பல் கூடங்குளம் அருகே உள்ள சவுந்திரலிங்கபுரத்தைச் சேர்ந்த சிவமிராசு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகளையும் தீவைத்து எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளையும், வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக பழவூர் காவல் நிலையத்திலும், கூடங்குளம் காவல் நிலையத்திலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.