திருநெல்வேலி,செப்.23: திருநெல்வேலியில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், செவ்வாய்க்கிழமை தர்னா நடைபெற்றது.
பிஎஸ்என்எல் பணியாளர்கள் சங்கம், என்எப்டிஇ, எப்என்டிஓ, டிஇபியூ ஆகிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், வண்ணார்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் இந்த தர்னா நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர்கள் சி. சுவாமிகுருநாதன், ஆர். கணபதிராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில அமைப்புச் செயலர்கள் டி.கோபாலன், பி. சண்முகம், மாவட்டச் செயலர்கள் என். சூசைமரியஅந்தோனி, கணேசன் ஆகியோர் போராட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளிட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கு உள்ள ஊதிய தேக்க நிலைக்கு தீர்வு காண வேண்டும். பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான தடைகளை நீக்க வேண்டும். மருத்துவப் படிகளை திரும்ப வழங்க வேண்டும்.
நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வு கால பலன்களை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் முறையை தவிர்த்து பிஎஸ்என்எல் ஊழியர்களை மட்டுமே வைத்து அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இந்த தர்னாவில் மாவட்டம் முழுவதும் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.