திருநெல்வேலி,செப்.23: பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பட்டியலின மாணவர்களுக்கு அரசு கடந்த 3 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்காததைக் கண்டித்தும், பட்டியலின மாணவர்களுக்கான விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும். மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் பட்டியல் இன ஆசிரியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேவேந்திரகுல வேலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் ப. ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் இரா. சாமி, மாநிலப் பொருளாளர் பொன்ராஜேந்திரன், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலர் ம. யாக்கோபு, மாநகரத் தலைவர் ச. சுபாஷ், மாநகர மாவட்டச் செயலர் வன்னை செ. முருகன், கிழக்கு மாவட்டச் செயலர் மங்கள்ராஜ்பாண்டியன், மேற்கு மாவட்டச் செயலர் சீமான்பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலர் சரவணன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.