Enable Javscript for better performance
சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க வேண்டும்: பேராசிரியர் ஏ.ஜி. முருகேசன் - Dinamani

சுடச்சுட

    

    சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க வேண்டும்: பேராசிரியர் ஏ.ஜி. முருகேசன்

    Published on : 27th March 2014 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனதுக்கு இதமளிக்கும் பறவைகளான சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் மையப் பேராசிரியர் ஏ.ஜி. முருகேசன் வலியுறுத்தினார்.

    உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், ஆழ்வார்குறிச்சி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பா.குமார் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில், பேராசிரியர் ஏ.ஜி.முருகேசன் பேசியதாவது: சிட்டுக்குருவிகளின் பிறப்பிடம் ஆசியா. இங்கிருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கும் சிட்டுக்குருவிகள் இடம்பெயர்ந்தன.

    மக்களின் வாழ்விடங்களில் மிகவும் நெருங்கி, கூட்டம் கூட்டமாகத் திரிந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. முன்பு வீட்டுக்கு ஒரு மரம் அல்லது சிறிய தோட்டம், ஓலைக்கூரை வேய்ந்த கூடம்  இருந்தது. வீடுகளில் நெல், சோளம், கேழ்வரகு, எள், உளுந்து போன்ற உணவு தானியங்களைக் காயவைப்பது, உடைத்தல், மாவாகத் திரித்தல் போன்ற சமயங்களில் இப்பறவைகள் அவற்றை உண்டு, வீடுகளில் மனிதர்களுடன் உறவாடி மகிழ்ந்தன.

    கூரை, மரங்களில் கூடுகட்டி வாழும் இப்பறவைகளை மக்களும் கண்டு மகிழ்ந்தனர்.

    நாகரீகம் வளர வளர கான்கிரீட் வீடுகளாக மாறியதால் மரங்களும், தானிய வகைகளும் குறைந்துவிட்டன. இதனால் சிட்டுக்குருவிகளுக்கு உணவு கிடைப்பது அரிதாகிவிட்டது. மேலும், பூச்சிமருந்துகள் மூலம் உற்பத்தி செய்யும் தானிய வகைகளை உண்ணும் பறவையினங்கள் அழிந்து வருகின்றன.

    அதிகரித்துவரும் வாகனங்களின் நச்சுப்புகை, நகரமயமாக்கல் காரணமாக குருவிகள் இடம்பெயர்ந்து காணாமல் போய்விட்டன. செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சுகளின் தாக்கத்தால் சிட்டுக்குருவி இனங்கள் பாதிக்கப்படுவதாகக் கருத்து நிலவுகிறது.

    12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய சிட்டுக்குருவிகள், குளிர்காலம் முடிந்து கோடைக்கால ஆரம்பத்தில் முட்டையிடும். சுமார் 17 நாள்களில் 5 முதல் 6 முட்டைகள் இடும். 10 முதல் 13 நாள் வரை அடைகாத்து குஞ்சு பொரிக்கும். ஆண் மற்றும் பெண் குருவிகள் சேர்ந்து அடைகாப்பது அதன் சிறப்புக் குணமாகும்.

    வீடுகளில் நாய், கிளி, ஆடு, மாடுகள் போன்றவற்றைக் கொண்டுவந்து வளர்க்கும் நாம், நமது வசிப்பிடங்களில் நம்மை சுற்றிச்சுற்றி வரும் சிட்டுக்குருவிகளைப் பேணிக்காக்கத் தவறிவிட்டோம். மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்துவிட்ட சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்.

    முடிந்தவரை வீட்டின் அருகில் மரங்களை நட வேண்டும். வீட்டின் ஓரிடத்தில் மண் கலயம், சிறிய கூடையை வைத்து குருவிகள் தங்குவதற்கு உதவ வேண்டும். குருவி முட்டைகளை உடைக்காமல் அவை இனப்பெருக்கம் செய்ய உதவ வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai