Enable Javscript for better performance
நெல்லை மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளை திமுக புறக்கணிக்கிறதா?- Dinamani

சுடச்சுட

  

  நெல்லை மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளை திமுக புறக்கணிக்கிறதா?

  By dn  |   Published on : 27th March 2014 04:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளை திமுக புறக்கணிப்பதாக எழுந்துள்ள புகாருக்கு அக் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் பதில் அளித்தார்.

  திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து தேர்தல் பணியாற்றுவதற்காக சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக் கூட்டம் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றும், புறக்கணிக்கப்படுவதாகவும் சிலர் புகார் தெரிவித்தனர். மேலும், அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற கூட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்தது.

  இந்த நிலையில், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திமுக மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் பேசியது:

  கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் காயம்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். அந்தக் காயத்துக்கு மருந்துபோட வேண்டிய திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகவே கூட்டணிக் கட்சிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, திமுக நிர்வாகிகளை அழைத்து கண்டித்துள்ளேன். ராதாபுரம், நான்குனேரி தொகுதிகளின் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் பங்கேற்கவில்லை. அக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்புகொண்டு பேசியபோது எட்வர்டு ராஜ் என்ற பிரதிநிதி வருவதாகக் கூறினார். ஆனால், அக் கூட்டங்களில் அவர் வரவில்லை. அம்பாசமுத்திரம் கூட்டத்தில் ஆதித் தமிழர் பேரவையினர் தங்களை பேச அனுமதிக்குமாறு கோரினர். இதே பெயரில் பல அமைப்புகள் உள்ளதால் திமுக தலைமையிடம் ஆதரவு தெரிவித்து தாக்கீது பெற்று வர அறிவுறுத்தினேன்.

  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பிரதிநிதி கூட்டத்துக்கு வெகுநேரம் கழித்து வந்ததால் அவருக்கு பேச வாய்ப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த கூட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படும்.

  திமுக தலைமையிலான கூட்டணியில் 5 கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்த 5 கட்சிகள் மட்டுமல்லாது 10 கட்சிகள் எந்தவித கைமாறும் இல்லாமல் ஆதரவு தெரிவித்துள்ளன.

  வைகோ, மோடி குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். அதற்காக வைகோ, மோடி ஆகியோருக்கு ஆதரவாக இருப்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

  நீர் அடித்து நீர் விலகாது. ஆனால், கூட்டணியில் விரிசல் வராதா என எதிர்பார்த்துக்  காத்திருக்கின்ற நபர்கள் திமுக கூட்டணிக்குள் வரும் எந்த ஒரு கருத்தையும் எதிர்ப்பாக காட்ட முயலுகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் 5 ஆயிரம் ஆதரவாளர்கள் இருந்தால், 5 கருப்பு ஆடுகள் இருக்கும். அத்தகைய துரோகிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

  முன்னதாக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் மில்லத் இஸ்மாயில் பேசியது:

  கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளுக்கும் திமுக மதிப்பளிக்க வேண்டும். தவறு செய்தால் அதைக் குறிப்பிட்டால் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், உணர்வுபூர்வமான விஷயங்களில் புறக்கணிக்கக் கூடாது. திமுகவுடனும், கூட்டணிக் கட்சிகளுடனும் இணைந்து பாடுபட மனிதநேய மக்கள் கட்சி தயாராக உள்ளது என்றார்.

  இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே சலசலப்பு இருந்ததாகக் கூறப்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

  இக் கூட்டத்தில், ச.தங்கவேலு எம்.பி., சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, எம்எல்ஏ டி.பி.எம். மைதீன்கான், மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் அப்துல் வகாப், மாவட்ட இளைஞரணிச் செயலர் ஜார்ஜ் கோசல், மாநகர இளைஞரணிச் செயலர் சுரேஷ், மாணவரணிச் செயலர் அருண்குமார் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai