Enable Javscript for better performance
மூன்றடைப்பு அருகே கல்லூரியில் மாணவர்கள் மோதல்: 8 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    மூன்றடைப்பு அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை மாணவர்கள்  மோதிக்கொண்டதில் 8 பேர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மூன்றடைப்பு அருகே உள்ள மருதகுளத்தில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது.

    இங்கு 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விழா நடத்த முடிவு செய்தனராம். இதற்கு பணம் பிரிப்பதற்கு முதலாமாண்டு, 3-ம் ஆண்டு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து புதன்கிழமை இருதரப்புக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

    இதில், ஒரு தரப்பைச் சேர்ந்த கீழப்பாவூர் முத்துகிருஷ்ணன் மகன் விவேகானந்தன் (21), ரமேஷ், சிதம்பரம், அண்ணாமலை ஆகியோர் காயமடைந்தனராம். மற்றொரு தரப்பில் காதர்மொய்தீன், சம்ஜித், காஜா, அன்வர் ஆகியோர் காயமடைந்தனராம். இவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    மருத்துவமனையில் பரபரப்பு: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த ஒரு தரப்பு மாணவர்களைச் சந்தித்து இந்து முன்னணி நிர்வாகிகள் வி.பி.ஜெயகுமார், வழக்குரைஞர் பாலாஜிகிருஷ்ணசாமி, குற்றாலநாதன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.

    அதே நேரத்தில் இதேபோல மற்றொரு தரப்பைச் சேர்ந்த மாணவர்களைச் சந்திக்க இஸ்லாமிய அமைப்பினரும் வந்ததால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் மாதவன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai