Enable Javscript for better performance
தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் தவிக்கிறது 48ஆவது வார்டு!- Dinamani

சுடச்சுட

    

    தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் தவிக்கிறது 48ஆவது வார்டு!

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாநகராட்சியின் 48ஆவது வார்டு விரிவாக்கப் பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லாததால் இருளில் தவிப்பதாக புகார் தெரிவித்து மாமன்ற உறுப்பினர் அரிக்கேன் விளக்கு ஏந்தியவாறு, மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருநெல்வேலி மாநகராட்சியின் 48ஆவது வார்டுக்குள்பட்ட ரஹமத் நகர், நரிக்குறவர் காலனி குடியிருப்பு, ஆசிரியர் காலனி, ஜெகஜீவன் ராம் நகர், சின்மயா நகர், செந்தமிழ் நகர், குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் விரிவாக்கப் பகுதிகளாகும்.

    இந்தப் பகுதிகளில் கடந்த 2002ஆம் ஆண்டு உள்ள வீடுகளின் எண்ணிக்கைப்படி தெருவிளக்குள் அமைக்கப்பட்டன. ஆனால், 12 ஆண்டுகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவிட்டது.

    எனினும், அதற்கேற்ப தெருவிளக்குகள் அதிகரிக்கப்படவில்லையாம். இதனால், இப்பகுதிகளில் இரவு நேரத்தில் வெளிச்சமின்றி யாரும் நடமாட முடியாத நிலையும், வழிப்பறி கொள்ளையும் அதிகரித்து வருகிறதாம். நரிக்குறவர் காலனியில் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துகள் புகுந்து முதியவர்களும், சிறார்களும் விஷக் கடிக்கு ஆளாகின்றனராம்.

    மேலும், சாலை, சாக்கடை, கழிப்பறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், இப் பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, இப் பகுதி மாமன்ற உறுப்பினர் சரவணன் முறையீட்டின்பேரில், பணிகளுக்கு தீர்மானம் கொண்டுவரப்பட்டதாம்.

    இந்நிலையில், புதிய மேயராக இ. புவனேஸ்வரி பதவியேற்ற பின், இந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாம். மீண்டும் அதற்கான தீர்மானம் கொண்டுவரப்படவில்லையாம்.

    இதையடுத்து, வார்டு மக்களுடன் சேர்ந்து அரிக்கேன் விளக்கை தலையில் சுமந்தபடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தார் மாமன்ற உறுப்பினர் சரவணன். மேயர், துணை மேயரிடம் கோரிக்கை மனு அளித்து பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தினார்.

    பின்னர், அவர் கூறுகையில், ""ரத்து செய்த தீர்மானங்கள் குறித்து 2 மாதத்தில் ஆய்வு செய்து பணிகளை தொடங்குவதாக மேயர் இ. புவனேஸ்வரி கூறினார். 8 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே, அரிக்கேன் விளக்கேந்தி வந்து வார்டின் அவலநிலையை விளக்கியுள்ளேன். இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடுவேன்'' என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai