Enable Javscript for better performance
நீதிபதிகள் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்: நல்லகண்ணு- Dinamani

சுடச்சுட

    

    நீதிபதிகள் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்: நல்லகண்ணு

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் சாதி மோதல், கொலைகளைத் தடுக்க நீதியரசர்கள் ரத்னவேல் பாண்டியன், மோகன் ஆகியோர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஆர். நல்லகண்ணு வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. மாணவர்களிடம் சாதிய உணர்வு அதிகரித்துக் காணப்படுகிறது. இளைஞர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லப்படுவதால் சாதிய மோதல், கொலைகள் அதிகரித்துவிட்டன. இதனால் தென்மாவட்டங்களின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    கடந்த 95, 97ஆம் ஆண்டு கலவரங்களில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; ரூ. 109 கோடி சொத்துகள் சேதமடைந்தன. இதேபோல, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்னையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். இப் பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கடுமையான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் விசாரணை நடத்த நீதியரசர்கள் மோகன், ரத்னவேல்பாண்டியன் ஆகியோரது தலைமையில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இக்குழுக்கள் அரசுக்கு தனித்தனியே அறிக்கை சமர்ப்பித்தன. அந்த அறிக்கைகளில், சாதிய மோதல்களைத் தடுக்க வேண்டுமெனில் சாதியத் தலைவர்களது சிலைகளை புதிதாக திறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும், வேலைவாய்ப்பு இல்லாததே இளைஞர்களைத் தீய வழியில் ஈடுபடச் செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    வன்கொடுமை, தீண்டாமை ஒழிப்புச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க பல்வேறு தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும், நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.

    ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சிசெய்த இரு திராவிடக் கட்சிகளுமே இக்குழுவினரின் பரிந்துரைகளை செயல்படுத்தவில்லை. இதன் காரணமாகவே இப்போது மீண்டும் சாதியக் கொலைகள் அதிகரித்துவிட்டன. இந்நிலை மாற வேண்டுமெனில் நீதிபதிகள் குழு பரிந்துரையை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

    நான்குனேரியில் பல்துறை தகவல் தொழில்நுட்பப் பூங்கா, கங்கை கொண்டான் ஐடி தொழில்நுட்பப் பூங்கா ஆகியவற்றை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். மூடப்பட்ட பேட்டை, நாசரேத் கூட்டுறவு நூற்பாலை, செங்கோட்டை தேசியமய நூற்பாலைகள், வள்ளியூர், பேட்டை சிட்கோ, ஐடிஐ ஆலைகளைத் திறக்க வேண்டும். கயத்தாறு, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் புதிய ஆலைகள் தொடங்க வேண்டும்.

    நான்குனேரியில் ரயில் பெட்டி தொழிற்சாலை, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம், கோபாலசமுத்திரத்தில் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா, சங்கரன்கோவில், ராதாபுரம், குற்றாலத்தில் வாசனை திரவிய ஆலைகள், புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைப் பூங்கா என, பெயரளவில் அறிவிக்கப்பட்ட அனைத்துத் தொழில் திட்டங்களையும் விரைந்து தொடங்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai