Enable Javscript for better performance
போலி மது கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போலி மது கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மினி லாரியில் போலி மதுபாட்டில்கள் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் விழுப்புரத்துக்கு விசாரணைக்காக சென்றுள்ளனர்.

    இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் கூறப்பட்டதாவது:

    விழுப்புரத்தில் இருந்து குமார் என்பவர் மூலம் 120 பெட்டிகளில் தலா 48 போலி மது பாட்டில்கள் (160 மி.லி.) மினி லாரியில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். அவற்றில் சில பெட்டிகள் கிருஷ்ணாபுரம், தாழையூத்து பகுதிகளில் இறக்கப்பட்ட பின்னர், பாளையங்கோட்டை வி.வி.நகர் பகுதிக்கு லாரி வந்தபோது போலீஸாரின் வாகனச் சோதனையில் சிக்கியது.

    இதுதொடர்பாக லாரியின் ஓட்டுநரான விழுப்புரத்தைச் சேர்ந்த குப்பன், ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள செம்பூரைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்டோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும், இவ் வழக்கு தொடர்பாக சிலரிடம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கீழபுத்தனேரியைச் சேர்ந்த கார்த்திக், கீழநத்தத்தைச் சேர்ந்த மாயாண்டி, தாழையூத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, தனிப்படை போலீஸார் விழுப்புரத்துக்குச் சென்றுள்ளனர். மதுபாட்டில் கடத்தலில் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கருதப்படும் விழுப்புரத்தைச் சேர்ந்த குமார், முகவராகச் செயல்பட்டுள்ள பாண்டி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.  அவர்கள் இருவரும் சிக்கினால்தான் போலி மது பாட்டில்கள் தமிழகத்தின் எந்தெந்தப் பகுதிகளுக்கு இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai