Enable Javscript for better performance
மக்களிடையே சமூக நல்லிணக்கம் வேண்டி இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களிடையே சமூக நல்லிணக்கம் வேண்டி இந்திய கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்

    By திருநெல்வேலி  |   Published on : 17th April 2015 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்களிடையே சமூக நல்லிணக்கம் வேண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    மார்க்கெட் மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தலைமை வகித்துப் பேசியதாவது:

    தென்மாவட்டங்களில் 1995, 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சாதிய மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. அப்போதைய கலவரத்தின்போது அமைக்கப்பட்ட நீதியரசர்கள் குழுவின் 43 முக்கிய பரிந்துரைகளில் ஒன்றுகூட முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால்தான் சாதி மோதல், கொலைகள் அதிகரித்துவிட்டன.

    சாதி மோதல்களைத் தொடர்ந்து மத மோதல்களும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய போக்கை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஒற்றுமைக்கு வழிகாண வேண்டும் என்றார்.

    கட்சியின் மூத்த தலைவரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஆர். நல்லகண்ணு, உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினார். அப்போது அவர், தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்க அனைத்துக் கட்சியினர், அனைத்து சமூகத்தினருடன் கூடிய ஒருங்கிணைந்த குழுவை ஏற்படுத்தி, ஒற்றுமைக்கு வழிகாண காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

    மாவட்டச் செயலர்கள் காசிவிஸ்வநாதன் (திருநெல்வேலி), அழகுமுத்துப்பாண்டியன் (தூத்துக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர்கள் பி. பெரும்படையார், பி. பொன்னுசாமி, போஸ், விவசாயிகள் சங்கம், ஏஐடியூசி, மாதர் சங்கம் என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கட்சியினர் என பங்கேற்றனர். உண்ணாவிரதப் போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai