Enable Javscript for better performance
நியூஹோப் புனர்வாழ்வு மையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    நியூ ஹோப் புனர்வாழ்வு மையத்தின் திறப்பு விழா பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    எம்.ஜி. பில்டர்ஸ் குழுமம் சார்பில் குற்றாலத்தில் அமையவுள்ள நியூ ஹோப் புனர்வாழ்வு மையம், எம்.ஜி. இயற்கை வேளாண் திட்டம் தொடக்க விழா, லட்சுமி மினி அரங்கு திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி, அழகர்நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    விழாவில் மருத்துவர் அருணா சந்திரசேகரன் பேசியதாவது: புற்றுநோய் என்பது உணவுப் பழக்க மாற்றத்தால் அதிகம் வருகிறது. புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பூரணமாக குணமாக்க முடியும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெற்றுக் கொள்வது அவசியம்.

    இயற்கை உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். கீரைகள், மஞ்சள் நிறப் பழங்களை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோயைத் தடுக்க முடியும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உறவினர்களால் பராமரிக்க முடியாதோரை குற்றாலம் நியூ ஹோப் புனர்வாழ்வு மையத்தில் வைத்து கண்காணிக்க உதவப்படும் என்றார் அவர்.

    விழாவில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் து.பெ. சுரேஷ்குமார் பேசுகையில், இயற்கை உணவுகளும் மூலிகைத் தாவரங்களும் பொக்கிஷம் போன்றவை. இப்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு இயற்கை உணவு முறைகள் குறித்து கற்றுக்கொடுப்பதும், அதைச் சாப்பிட பழக வைப்பதும் பெற்றோரின் கடமை என்றார். புனர்வாழ்வு மையத்தை டாக்டர் ஏ. சைமன்ஹெர்குலஸ் தொடங்கி வைத்தார். லட்சுமி மினி அரங்கை நல்லமங்கை மீனாட்சிசுந்தரம் திறந்துவைத்தார்.

    மருத்துவ முகாம்: எம்.ஜி. பில்டர்ஸ், நியூஹோப் மருத்துவமனை மற்றும் உதவும் உள்ளங்கள் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இலவச புற்றுநோய், மூளை மற்றும் தண்டுவட சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்று சென்றனர். விழாவில், மருத்துவர்கள் பி.சுப்பிரமணியன், எஸ்.இளங்கோ, எம்.ஜி. பார்ம் நிறுவன இயக்குநர் கே. செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மருத்துவர் கே.சிவகுமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai