Enable Javscript for better performance
டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்

    By திருநெல்வேலி  |   Published on : 28th January 2015 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி, ஜன. 27: திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது; வைரஸ் காய்ச்சல்களால் இனி இறப்பு இல்லை என்ற நிலையை நோக்கி தொடர் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    விருதுநகர், ராஜபாளையம், சங்கரன்கோவில் பகுதிகளில் பரவும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொருத்தவரை அங்குள்ள குழந்தைகள் பிரிவில் மொத்தம் 65 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 35 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள். அதில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் என்பது உறுதியாகியுள்ளது.

    இந்நிலையில், இந்த மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு 1, 2ஆவது வார்டுகளை ஆய்வு செய்து, சிகிச்சை பெறும் குழந்தைகளைப் பார்வையிட்டார். தீவிர கண்காணிப்புடன் சிறந்த முறையில் சிகிச்சை வழங்க மருத்துவர்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இம் மருத்துவமனை வளாகத்தில் ரூ.6.25 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டு இயங்கி வரும் ஒருங்கிணைந்த அவசர கால தாய்-சேய் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுக்குச் சென்று, அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள்குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். ரூ.7.15 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் செவிலியர் தங்கும் விடுதிக்கான கட்டடப் பணிகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு தனிக்கவனம் செலுத்தி, இறப்பு விகிதம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் இம் மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.15 கோடி மதிப்பில் மண்டல புற்றுநோய் மையத்துக்கான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ரூ.20 கோடி மதிப்பில் 200 படுக்கை வசதிகளுடன்கூடிய மகப்பேறு ஒப்புணர்வு மையத்துக்கான பணி செயல்படுத்தப்பட உள்ளது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.28 கோடி மதிப்பில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டப்  பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப் பணிகள் இன்னும் 2 மாதத்துக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது என்றார் அவர்.

    ஆய்வின்போது சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் ஆர்.முருகையாபாண்டியன், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ச.முத்துசெல்வி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் இயக்குநர் சந்திரநாதன், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலெட்சுமி, ஆரம்ப சுகாதார நிலையங்களின் இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் எல்.டி.துளசிராம், துணை இயக்குநர் ராம்கணேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai