Enable Javscript for better performance
மாநில கலைப் போட்டி: மதுரை கல்லூரிக்கு சாம்பியன் பட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில கலைப் போட்டி: மதுரை கல்லூரிக்கு சாம்பியன் பட்டம்

    By திருநெல்வேலி  |   Published on : 28th January 2015 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி, ஜன. 27: பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவில் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையிலான கலைப் போட்டியில் அதிகப் புள்ளிகள் பெற்று மதுரை புனித ஜஸ்டின் கல்வியியல் கல்லூரி முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    தமிழர்கள் தங்கள் பண்பாட்டு மரபினை இலக்கியம், உணவு, விருந்தோம்பல், சிற்பக் கலை, ஆடல், பாடல், கட்டடக் கலை, இசை போன்ற 64 கலைகள் மற்றும் சமயம், சம்பிரதாயங்கள், ஆடை, ஆபரணங்கள், விழாக்கள், விவசாயம், தொழில், விளையாட்டு என ஒவ்வொரு வகையிலும் கடைப்பிடித்து பெருமை அடைகிறான்.

    பண்பாட்டு விழுமியங்கள் நம்மிடையே காணப்பட்டாலும் நாகரிகம் என்ற பெயரில் அப்பண்பாடு சீர்குலைந்து வருகிறது. தமிழர் பண்பாடு, பாரம்பரிய அடையாளங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்

    பண்பாடு, பாரம்பரியம் அவற்றின் அடையாளங்கள் என்ற தலைப்பில் மாநில அளவில் கல்வியல் கல்லூரிகளுக்கு இடையிலான கலைப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

    பாளையங்கோட்டை புனித இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போட்டியை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் டி. ஜான் பிரிட்டோ தொடங்கிவைத்தார். கல்லூரித் தாளாளர் லில்லிபுஷ்பம் முன்னிலை வகித்தார். முதல்வர் இ.சி. புனிதா, கல்லூரிகளின் தேர்வுத்துறைக் கட்டுப்பாட்டு அலுவலர் எம். மரியசரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.

    வென்றவர்கள்: பேச்சுப்போட்டியில் முளகுமூடு போப் ஜான்பால் கல்லூரி மாணவி நிஷாந்தி, பாடல் போட்டியில், கடம்போடுவாழ்வு புனித ஜோசப் கல்லூரி மாணவி ராஜாஅனிதா, கவிதைப் போட்டியில் மன்னார்விளை புனிய ஜேம்ஸ் கல்லூரி மாணவி கல்பனா, கோலப் போட்டியில் மதுரை ஜஸ்டின் கல்லூரி மாணவி சத்யபானு, விளம்பரம் வரைதல் போட்டியில் கடம்போடுவாழ்வு புனித ஜோசப் கல்லூரி மாணவர் பிரமுத்து, கட்டுரைப் போட்டியில் சிவகிரி ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவி தீபலட்சுமி, வீதி நாடகம் போட்டியில் திருச்செந்தூர் சிவந்திஆதித்தனார் கல்லூரியும், நடனப் போட்டியில் செண்பராமன்புதூர் எம்.இ.டி. கல்லூரியும், சத்தான இயற்கை உணவு தயாரித்தல் போட்டியில் மன்னார்விளை ஜேம்ஸ் கல்லூரியும் முதலிடம் பெற்றனர்.

    சாம்பியன் பட்டம்: அதிகப் புள்ளிகள் பெற்று மதுரை புனித ஜஸ்டின் கல்வியியல் கல்லூரி முதலிடமும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், கன்னியாகுமரி ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி 2ஆவது இடமும் பெற்றன.

    பின்னர் நடைபெற்ற விழாவில் தூய சவேரியார் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் யூஜின்பிராங்கோ, வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முதல்வர் இ.சி. புனிதா வாழ்த்திப் பேசினார். ஒருங்கிணைப்பாளர்  சி.ஆர். கிளாடிஸ்ஸ்டெல்லாபாய் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai