Enable Javscript for better performance
ஆட்சிமாற்றத்தால் புதிய சரித்திரத்தை உருவாக்குங்கள்: பிரேமலதா விஜயகாந்த்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சிமாற்றத்தால் புதிய சரித்திரத்தை உருவாக்குங்கள்: பிரேமலதா விஜயகாந்த்

    By திருநெல்வேலி  |   Published on : 15th April 2016 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தின் மூலம் புதிய சரித்திரத்தை உருவாக்குங்கள் என்றார் தேமுதிக மகளிரணித் தலைவி பிரேமலதா விஜயகாந்த்.

    திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில், வேனில் இருந்தவாறே அவர் பேசியதாவது:

    திமுகவுக்கு மாற்று அதிமுக என்றும், அதிமுகவுக்கு மாற்றும் திமுக என்றும் கருதி வாக்களித்த மக்களுக்கு புதிய அணியை அடையாளப்படுத்தியுள்ளோம். திமுக, அதிமுக கட்சிகள் ஏதும் செய்யவில்லை என்ற கொந்தளிப்பை மக்கள் மத்தியில் காணமுடிகிறது.

    கூட்டணி அமைப்பதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பல்வேறு வதந்திகளைப் பரப்பினார்கள். அந்த வதந்திகளையெல்லாம் தவிடுபொடியாக்கி தமிழகம் மற்றும் தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் வகையிலும், திமுக, அதிமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் சிறந்த கூட்டணியை உருவாக்கியுள்ளார்.

    எளிமை, தூய்மை, ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாத தலைவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிக்கு வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் புதிய ஆட்சி, புதிய சரித்திரத்தை உருவாக்க வேண்டும்.

    இளைஞர்கள் அதிகமுள்ள கூட்டணியாக தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி உருவாகியுள்ளது. எங்களது கூட்டணியில் பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்பட உள்ளார். அவருக்கு வாக்காளர்கள் ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். லஞ்சம் ஊழல் இல்லாத புதிய அரசை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

    இதைத் தொடர்ந்து, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தச்சநல்லூரில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திருநெல்வேலி தொகுதியின் தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

    பிரசார கூட்டத்தில் தேமுதிக மாநகர் மாவட்டச் செயலர் ஏ.முகம்மது அலி, கிழக்கு மாவட்டச் செயலரும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளருமான ஜெயபாலன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் கே.எம்.ஏ.நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் காசிவிஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி கார்த்திக், தமிழ் மாநில காங்கிரஸ் மத்திய மாவட்டத் தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    5 நிமிடத்தில் பிரசாரம் நிறைவு

    திருநெல்வேலி மாநகராட்சியில் மேலப்பாளையம் சந்தைமுக்கு, ஜவாஹர்திடல், தச்சநல்லூர் பகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் வேன் மூலம் பிரசாரம் செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வியாழக்கிழமை மாலையில் ஜவாஹர் திடலில் நடைபெற இருந்த பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு இடங்களில் மட்டுமே பிரசாரம் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மேலப்பாளையத்துக்கு 8.30 மணிக்கு வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9.30 மணிக்கே பிரேமலதா வந்தார். அங்கு 15 நிமிடங்கள் பேசிய அவர், தச்சநல்லூரில் மொத்தம் 5 நிமிடங்களில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். மேலப்பாளையத்துக்குள் அவரது பிரசார வாகனம் வந்ததும், அவ் வழியாக ஓர் ஆம்புலன்ஸ் வந்தது. அதற்கு வழிவிடுமாறு கூறி தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பின்பே பேச்சைத் தொடங்கினார்.

    மதிமுக வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதையறிந்து தனது பிரசார உரையில் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளியுங்கள் என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai