Enable Javscript for better performance
பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு கொண்டாட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்- Dinamani

சுடச்சுட

    

    பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு கொண்டாட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

    By அம்பாசமுத்திரம்  |   Published on : 15th April 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாபநாசம் உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயில் சித்திரை விஷு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தாமிரவருணியில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.

    பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு விழா இம்மாதம் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்று வந்தது. 9ஆம் திருநாள் புதன்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    தமிழ்ப்புத்தாண்டான சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் பாபநாசம் தாமிரவருணி நதியில் நீராடி கோயிலில் தரிசனம் செய்தனர். அதிகாலை 4 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 8 மணிக்கு தந்த பூம்பல்லக்கில் சுவாமி- அம்பாள் வீதி உலாவும், பிற்பகல் 1 மணியளவில் சுவாமி சன்னதி தீர்த்தவாரி மண்டபத்தில் சித்திரை விஷு தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து இரவு 1 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி} அம்பாள் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சி கொடுத்த வைபவம் நடைபெற்றது.

    விழாவுக்கு, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தென்காசியிலிருந்து சிறப்புப் பேருந்துகளை இயக்கியது.

    விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  பாபநாசம் தலையணை மற்றும் அகத்தியர் அருவியில் பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் புனித நீராடினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai