Enable Javscript for better performance
\\\"மைதீன்கானை மாற்றாவிட்டால் பாளை.யில் வெற்றி பெற முடியாது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மைதீன்கானை மாற்றாவிட்டால் பாளை.யில் வெற்றி பெற முடியாது'

    By திருநெல்வேலி  |   Published on : 15th April 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.பி.எம். மைதீன்கானை மாற்ற வேண்டும் என, அக்கட்சியின் 30 வட்டச் செயலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

    இதில், காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து கொண்டதால் வேட்பாளருக்கான எதிர்ப்பு தொகுதியில் வலுத்து வருகிறது.

    பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றவர் டி.பி.எம். மைதீன்கான். 2001இல் அதிமுக வேட்பாளர் எஸ். முத்துக்கருப்பனைவிட 14,478 வாக்குகள் அதிகம் பெற்று (மொத்தம் 55,934 வாக்குகள்) வெற்றி பெற்றார். 2006இல் அதிமுக வேட்பாளர் கே.எம். நிஜாமுதீனைவிட 41,299 வாக்குகள் அதிகம் பெற்று (மொத்தம் 85114 வாக்குகள்) வெற்றி பெற்றார். 2011இல் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வி. பழனியைவிட 605 வாக்குகள் அதிகம் பெற்று (மொத்தம் 58,049) வெற்றி பெற்றார். இவருக்கு தபால் வாக்குகள் 797 கிடைத்தது. இந்த வாக்குகளே இவரது வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது. இருமுறை வெற்றி பெற்றும் தொகுதிக்கு போதிய அளவு திட்டங்களைக் கொண்டுவரவில்லை; கட்சியினருடன் இணைக்கமாக இல்லை என்ற காரணங்களால் கடந்த முறையே தோற்பது உறுதி என திமுகவினர் கூறினர். ஆனால், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டவுடனேயே கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    சென்னையில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் பாளையங்கோட்டையில் மைதீன்கான் உருவபொம்மையை எதிர்த்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாளையங்கோட்டை தொகுதியில் வரும் 35 வார்டுகளில் 30 வட்டச் செயலர்கள் மைதீன்கானுக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். தங்களால் தேர்தல் பணி செய்ய முடியாது எனவும் கூறியுள்ளனர்.

    இதுதொடர்பாக, பாளையங்கோட்டை பகுதி திமுக துணைச் செயலர் முகமது கமாலுதீன், மேலப்பாளையம் பகுதி அவைத் தலைவர் சிவன்பாண்டி, தச்சநல்லூர் பகுதி துணைச் செயலர் ஸ்டார் முருகன், மாநகர, மாவட்ட பிரதநிதிகள், பகுதி துணைச் செயலர்கள், மாணவரணி, சிறுபான்மை பிரிவு, ஆதிதிராவிட நலக் குழு, தொண்டரணி, இளைஞரணி, மருத்துவரணியைச் சேர்ந்த நிர்வாகிகள், வட்டச் செயலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வேட்பாளரை மாற்றக் கோரி தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, அவர்கள் கூறியது: 2011ஆம் ஆண்டே மைதீன்கான் மீது அதிருப்தி நிலவியது. இதனால்தான் சொற்ப வாக்குகளில் வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. இந்நிலையில், அவருடன் வாக்குகேட்டு தொகுதிக்குள் எங்களால் செல்ல முடியாத நிலையுள்ளது. திமுகவினர் மட்டுமல்லாது தொகுதி மக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். மைதீன்கான் வெற்றி பெற முடியாது. எனவே, வேட்பாளரை மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் தேர்தல் பணியில் ஈடுபடமாட்டோம் என்றனர். இவர்களுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நிர்வாகிகள் சிலரும் மைதீன்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai