Enable Javscript for better performance
ஆடி அமாவாசைத் திருவிழா: பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்த காளத்திமடம் கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆடி அமாவாசைத் திருவிழா: பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்த காளத்திமடம் கிராம மக்கள்

    By திருநெல்வேலி  |   Published on : 01st August 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசைத் திருவிழாவில் கிராம மக்கள் பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாமல் கலந்து கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

    பிரசித்திபெற்ற அருள்மிகு காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசைத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால் வனம், தாமிரவருணி நதி, கோயில் அமைந்துள்ள பகுதி மாசுபடுவதாக புகார் கூறப்படுகிறது.

    இதையொட்டி வனத்துறை, தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இவ்விழாவில் ஆலங்குளம், அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலில் ஒரு வாரம் தங்கி வழிபடுகின்றனர்.

    இதையொட்டி அக்கிராமங்களில் ஏட்ரி தொண்டு நிறுவனம் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

    நிகழாண்டு ஆலங்குளம் அருகேயுள்ள காளத்திமடத்தில் 15 தினங்கள் முகாமிட்டு வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்குமாறு வலியுறுத்தினர்.

    இதன் பயனாக கோயில் திருவிழாவுக்கு வருகை தந்த அக்கிராமத்தை சேர்ந்த 250 குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான பொருள்களை துணிப்பைகள், பாத்திரங்களில் சேகரித்து எடுத்து வந்தனர்.  கிராம மக்கள் பிளாஸ்டிக் பை போன்ற பாலிதீன் பொருள்களை முற்றிலும் தவிர்த்தனர் என ஏட்ரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தெரிவித்தார்.

    நிகழாண்டு செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆடி அமாவாசைத் திருவிழாவையொட்டி பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற பக்தர்களுக்கு தேவையான வசதிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வனம், வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாபநாசம் வனத்துறை சாவடியில் சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    சிறப்புப் பேருந்துகள்:  பக்தர்கள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை ஆலங்குளம், அம்பாசமுத்திரத்தில் இருந்து தலா 5 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி, ஆலங்குளம், சேரன்மகாதேவி, தென்காசி, அம்பாசமுத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    இதுதவிர பக்தர்கள் வாடகை கார், வேன், மாட்டு வண்டிகளில் கோயிலுக்கு வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாபநாசத்தில் வனத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் துணிப் பைகள் வழங்கப்பட்டன.

    உண்டியல் வசூல்: இக்கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல் எண்ணப்படுவதுண்டு. செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசைத் திருவிழா நடைபெறுவதையொட்டி சனிக்கிழமை இக்கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. பண்பொழி மலைக்கோயில் நிர்வாக அலுவலர் செல்வக்குமாரி, இக்கோயில் நிர்வாக அதிகாரி தங்கபாண்டியன், ஆய்வாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது. இதில் காணிக்கை தொகை ரூ. 2 லட்சத்து 52 ஆயிரத்து 370 இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai