சுடச்சுட

  

  ஆடி அமாவாசை: காரையாறில் பக்தர்கள் குவிந்தனர்

  By திருநெல்வேலி  |   Published on : 02nd August 2016 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டம், காரையாறில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

  காரையாறில் மிகவும் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருநாள் சிறப்பாக நடைபெறும். சொரிமுத்து அய்யனார், சங்கிலிபூதத்தார், பட்டவராயன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும், பூக்குழி, கிடாவெட்டி பொங்கலிடுதலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள்.

  ஆலங்குளம் வட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து காரையாறில் குடில் அமைத்து தங்கி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதுதவிர வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்களும் இங்கு வருகிறார்கள். நிகழாண்டுக்கான ஆடி அமாவாசை திருநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

  இதையொட்டி கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் காரையாறுக்கு வாகனங்களில் சென்று தங்கியுள்ளனர்.

  திங்கள்கிழமை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காரையாறில் குவிந்தனர். தாமிவருணி கரையோரமும், சாலையோரமும் குடில் அமைத்து தங்கியுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர தனியாக வாகனங்களில் வருவோர் பொதிகையடி, கீழணை பகுதிகளில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனைக்கு பின்பே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். செவ்வாய்க்கிழமை (ஆக.2) காலை முதல் தாமிரவருணியில் நீராடி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அம்பாசமுத்திரம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாரும், வனத்துறையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  கட்டுப்பாடுகள் விதிப்பு: இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கோயில் உள்ளதால் வனவிலங்குகளுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாத வகையில் பக்தர்கள் வழிபாடு செய்து செல்ல வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள், மதுவகைகள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். மிகவும் கண்காணிப்போடு பார்த்துக் கொள்ள வேண்டும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai