Enable Javscript for better performance
குற்றாலம் சாரல் விழா: கண்காட்சியில் 111 நாய்கள் அணிவகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    குற்றாலம் சாரல் விழா: கண்காட்சியில் 111 நாய்கள் அணிவகுப்பு

    By தென்காசி  |   Published on : 02nd August 2016 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சிப் போட்டியில் 111 நாய்கள் அணிவகுத்தன.

    கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இக்கண்காட்சியில், திருநெல்வேலி, தூத்துக்குடி,விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து ராஜபாளையம், கன்னி, பக், பாக்சர், டாஸ்கண்ட், பிட்புல், கிரேட்டன், லேபரடார், டால்மேஷன், டாபர் மேன், கோம்பை, ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், மொகல்கவுண்ட், கேரவன்கவுண்ட், சிப்பிப்பாறை, பொமரேனியன், செயின்ட் பெர்னார்டு ஆகிய 19 வகையிலான 111 நாய்கள் பங்கேற்றன.

    இதில், கன்னி முதலிடத்தையும், டால்மேஷன் இரண்டாமிடத்தையும் பெற்றன.

    பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வா.விக்ரமன் தலைமை வகித்துப் பேசினார்.

    திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் ஆர்.திருஞானம் முதலிடம் பிடித்த கன்னி வகை நாயின் உரிமையாளர் குருவுக்கும், இரண்டாமிடம் பெற்ற டால்மேஷன் இன வகை நாய் உரிமையாளர் டாக்டர் விஜய் மற்றும் படகுப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும், பரிசுகளை வழங்கினார். மேலும்,போட்டியில் பங்கேற்ற அனைத்து வகை நாய்களின் உரிமையாளர்களுக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

    விழாவில், திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் க.வேலாயுத பெருமாள், காவல்துறை ஏ.எஸ்.பி. சசாங்சாய், குற்றாலம் பேரூராட்சி உறுப்பினர் நா. சேகர், நகரஅதிமுக செயலர் அசோக்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    படகுப் போட்டி:  சாரல் விழாவையொட்டி,குற்றாலம்-ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாமில்  படகுப் போட்டியை  திருநெல்வேலி மாவட்ட சுற்றுலா அலுவலர் டி.பேட்ரிக் வில்லியம் ஜார்ஜ் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

      இரு நபர்களுக்கான ஆண்கள் பிரிவு போட்டியில் குற்றாலத்தைச் சேர்ந்த இசக்கிராஜ், முத்துராஜ் அணியினர் முதலிடத்தையும், கருப்பசாமி, மாரியப்பன் அணியினர் இரண்டாமிடத்தையும், நான்குனேரி ஸ்டாலின், நிக்சன் அணியினர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

      பெண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த சங்கீதா, ப்ரீத்தாஸ்ரீ அணியினர் முதலிடத்தையும், ராமப்ரியா, ரேணுகா அணியினர் இரண்டாமிடத்தையும், ராஜபாளையம் தங்கமாரி,காளீஸ்வரி அணியினர் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

     நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்புஅலுவலர் ஆறுமுகச்செல்வி, தமிழ்நாடு ஹோட்டல் குற்றாலம் கிளை மேலாளர் அசோகன், இளைஞர் பாசறை நிர்வாகிகள் சுரேஷ், ஜெயகுமார்,நீச்சல் பயிற்சியாளர் கர்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai