சுடச்சுட

  

  குறைந்து வரும் அணைகளின் நீர்மட்டம்: பாசனத்துக்கு சுழற்சி முறையில் தண்ணீர்?

  By திருநெல்வேலி  |   Published on : 04th August 2016 11:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் பாசனத்துக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கும் நிலை உருவாகியுள்ளது.

  நிகழாண்டில் தென்மேற்கு பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கியபோதிலும் தொடர்ந்து பெய்யவில்லை. இதனால் எதிர்பார்த்தவாறு அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. ஜூன் மாதத்தில் 48.27 மி.மீ மழையும், ஜூலை மாதத்தில் 15 ஆம் தேதி வரை 9.67 மி.மீ மழையும் பெய்துள்ளது. இது வழக்கமான மழையளவை விட 28 சதவீதம் குறைவாகும்.

  நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் குறைவு. பருவ மழை சரிவர பெய்யாததால் நிகழாண்டு நெல் சாகுபடி பரப்பும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தாமிரவருணி பாசனத்தில் சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து இம்மாவட்டத்தில் இதுவரை சுமார் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் குறைவாகும்.

  புதன்கிழமை (ஆக. 3) நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 69.35 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 433.12 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 80.84 அடியாக இருந்தது. இவ்விரு அணைகளில் இருந்து 909.75 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு 55 கனஅடி, தாமிரவருணி ஆற்றில் 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

  மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67.93 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் 58.10 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 61.75 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 71 அடியாக இருந்தது. கடனாநதி அணையில் இருந்து 80 கனஅடி, ராமநதி அணையிலிருந்து 40 கனஅடி, அடவிநயினார் அணையில் 25 கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

  சுழற்சி முறையில்: சாகுபடிக்கு செப்டம்பர் மாதம் இறுதிவரை தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில் அணைகளின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீருக்காவும் தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில் சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. நீர் இருப்பை கருத்தில் கொண்டு சாகுபடிக்கு அணைகளில் இருந்து சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த சில தினங்களில் பாசனக் கால்வாய்களில் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  பிற அணைகளின் நீர்மட்டம்: கருப்பாநதி அணை 24.77 அடி, குண்டாறு அணை 36.10 அடி, வடக்குப் பச்சையாறு அணை 17.07 அடி, நம்பியாறு அணை 11.91 அடி, கொடுமுடியாறு அணை 24.25 அடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai