Enable Javscript for better performance
உள்ளாட்சி தேர்தலுக்கு முன் நெல்லை நகரில் அடிப்படை பணிகள்: ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுப்பதாக மண்டலத் தலைவர் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சி தேர்தலுக்கு முன் நெல்லை நகரில் அடிப்படை பணிகள்: ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுப்பதாக மண்டலத் தலைவர் உறுதி

    By திருநெல்வேலி  |   Published on : 05th August 2016 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக மாநகராட்சியின் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள வார்டுகளில் நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளுக்கும் ஒப்பந்தம் விட்டு பணிகள் தொடங்கப்படும் என மண்டலத் தலைவர் என். மோகன் உறுதியளித்தார்.

    திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் திருநெல்வேலி மண்டல வார்டு குழுக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. மண்டலத் தலைவர் என். மோகன் தலைமை வகித்தார். உதவி ஆணையர் சாமுவேல் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், 40ஆவது வார்டு உறுப்பினர் முத்துப்பாண்டி பேசியது: வார்டு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கப்படாததால் சாக்கடையும், மழைநீரும் மாநகாரட்சி பள்ளி வளாகப் பகுதியை சுற்றி தேங்கும் நிலையுள்ளது. எனவே, கழிவு நீரோடை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரப் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாத இடங்களில் விபத்துகளை தடுக்க விரைந்து விளக்குகள் பொருத்தவேண்டும் என்றார்.

    41ஆவது வார்டு உறுப்பினர் ஏ.எஸ். சங்கர்: அருள்மிகு நெல்லையப்பர் கோயில் தேர்கள் நிறுத்தும் பகுதியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவேண்டும். சொக்கப்பனைமுக்கு, சண்டிகேஸ்வரர் தெரு பகுதியில் கழிவ நீரோடை அமைத்து தெருக்களில் சாக்கடைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்குரத வீதியில் புதிய போர் அமைத்து குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்றார் அவர்.

    42ஆவது வார்டு உறுப்பினர் எம். கணேசன்: திருநெல்வேலி நகரத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கொசுக்கள் மூலம் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் கொசு மருந்து தெளித்தல், கொசுப் புகை மருந்து அடிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நாய்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இதேபோல, உறுப்பினர்கள் பொன்னையா பாண்டியன், சரவணன், அழகுராஜ், ராமகிருஷ்ணன், தனலட்சுமி உள்ளிட்ட பலரும் தங்களது வார்டு பகுதிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    குறிப்பாக மாநகரப் பகுதி முழுவதும் உள்ள தெருவிளக்குகளில் குழந்தைகளின் கைகளுக்கு எட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுவிட் போர்டுகளை உயர்த்தி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்து தலைவர் என். மோகன் பேசியது: தெருவிளக்கு கம்பங்களில் உள்ள சுவிட்ச் போர்டுகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தெருக்களில் சுற்றித் தரியும் நாய்களை பிடிக்கவும், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கவும் சுகாதாரப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் தேர்தல் அறிவிக்கப்படும் என்ற சூழல் உள்ளது.

    எனவே, தேர்தல் நடத்தை விதிகளை காரணமாகக் கூறி வார்டுகளில் நிலுவைப் பணிகளை தடுக்க இயலாத வகையில் அனைத்துப் பணிகளுக்கும் அனுமதி உத்தரவு அளிக்கப்படும். அடிப்படை கட்டமைப்புப் பணிகளுக்கு விரைந்து ஒப்பந்தம் கோரப்பட்டு இறுதி செய்யப்படும். ஆகஸ்ட் மாத இறுதிக்குள்ள திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் நிலுவை வேலைகளை விரைந்து தொடங்கவும், பொதுமக்களிடம் புகார்கள் இல்லாத வகையில் அனைத்துப் பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai