Enable Javscript for better performance
தனியார் பிடியில் மாநகராட்சி திருமண மண்டபம்: பாளை. மண்டல கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பிடியில் மாநகராட்சி திருமண மண்டபம்: பாளை. மண்டல கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்

    By திருநெல்வேலி  |   Published on : 05th August 2016 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தை தனியார் பிடியிலிருந்து மீட்டு மாநகராட்சி வசமாக்குவதில் மெத்தனப்போக்கு இருப்பதாக பாளையங்கோட்டை மண்டலக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

    திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டல வார்டு குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.சி. ராஜன் தலைமையில், பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. உதவி ஆணையர் ந. வசந்தராஜன் முன்னிலை வகித்தார்.

    கூட்டம் தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர் பரமசிவன் பேசியது: மாநகராட்சிப் பகுதியில் வீடு பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் இதுவரை இல்லாத வகையில் புதிய நடைமுறைகளை பின்பற்றுகின்றனர். மேலும், ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரிகளுக்கு பதிலாக கூடுதலாக வரி வசூலிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இத்தகைய போக்கை கைவிட வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபங்களை தனியாருக்கு குத்தகை விடுவதற்கு பதிலாக மாநகராட்சி நிர்வாகமே ஏற்று நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மண்டங்களை கையகப்படுத்தி வருகின்றனர். ஆனால், அந்த மண்டபங்களின் பெயர் தனியார் வசம் இருந்தபோது உள்ள நிலையில் உள்ளது. அனைத்து பெயர்களையும் மாற்றி மாநகராட்சி மண்டபம் என புதிய பெயர்ப் பலகை நிறுவ வேண்டும்.

    காங்கிரஸ் உறுப்பினர் உமாபதி சிவன்: திருநெல்வேலி மாநகராட்சியால் மீட்கப்பட்ட 3 திருமண மண்டபங்களில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் மட்டும் தனியார் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. மண்டபத்தை கையகப்படுத்த நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு அதிகாரிகள் அங்கு சென்று கையகப்படுத்தினால், தனியார் தரப்பினரும் அங்கு முகாமிட்டு உரிமை கோருகின்றனர். இதுதொடர்பாக, மாநகராட்சி நிர்வாகத்தால் மாநகரக் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மண்டப நிர்வாகம் முழுமையாக மாநகராட்சிக்கு வரவில்லை.

    இந்த விவகாரத்தில் காவல்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகிய இருதரப்பில் யாரிடம் மெத்தனம் உள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உதவி ஆணையர், ஆணையர், டிஐஜி என உயரதிகாரிகளிடம் முறையிட வேண்டும். மாநகராட்சிக்கு எதிராக தனிநபர் ஒருவரது ஆதிக்கத்தை அனுமதிக்கக் கூடாது. இல்லையெனில் இதர மண்டபங்களையும் தனியாருக்கு வழங்க வேண்டும் என்றார் அவர்.

    இதேபோல, திமுக உறுப்பினர்கள் கமாலுதீன், பிரான்சிஸ், காங்கிரஸ் உறுப்பினர் விஜயன் ஆகியோரும் திருமண மண்டப விவகாரம் தொடர்பாக அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்து கேள்வி எழுப்பினர். இந்த மண்டபங்களை ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த பொதுமக்கள் தங்களது இல்ல விழாக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாத வகையில் மாநகராட்சி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதற்கு மாநகராட்சி உதவி ஆணையர் வசந்தராஜன் அளித்த பதில்: திருமண மண்டபங்களை மாநகரட்சி நிர்வாகம் கையகப்படுத்திவிட்டது. இருப்பினும், ஏற்கெனவே உரிமம் பெற்ற தனியார் நிறுவனத்தின் ஆள்கள் 40-க்கும் மேற்பட்டோர் மண்டபத்துக்குள் புகுந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையருடன் கலந்துபேசி முடிவு எடுக்கப்படும். மண்டபம் முன்பதிவு செய்தவர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.

    தெற்கு பஜார் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!

    பாளையங்கோட்டை நகரின் இதயப் பகுதியான தெற்கு பஜார் சாலையானது மிகவும் குறுகலாக உள்ளது. இங்குதான் கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைப்பதால் மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூட்டம் எப்போதும் நிறைந்து காணப்படும். வாகனங்களும் அதிகம் வருவதால் இந்தச் சாலையானது நெரிசலாகவே உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மதுரை மாநகரச் சாலைகளில் பின்பற்றப்படுவதைப் போன்று ஒருபுறம் மட்டுமே வாகனம் நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல்துறைக்கு மாமன்றம் பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இதேபோல, பாளையங்கோட்டை நகராட்சியின் முதல் தலைவராக இருந்து நகரின் வளர்ச்சிக்கு வித்திட்ட மகாராஜபிள்ளை நினைவாக பாளையங்கோட்டை மேட்டுத் திடல் கிழக்கு பகுதியில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரு தீர்மானங்களும் மண்டலத் தலைவரால் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai