சுடச்சுட

    

    ஒப்பந்தம் வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: சசிகலா புஷ்பா எம்.பி. மீது காவல் ஆணையரிடம் புகார்

    By திருநெல்வேலி  |   Published on : 06th August 2016 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு துறையில் ஒப்பந்தம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்த சந்தோஷ் ஸ்டீபன் மகன் ராஜேஷ் (37) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

    நான் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் வேறு தொழில் தொடங்க முடிவு செய்தேன். அப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கான ஒப்பந்தம் எடுக்க முடிவு செய்தேன்.

    அதற்காக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன் ஆகியோரிடம் சென்று விசாரித்தேன். அப்போது அவர்கள் ரூ.20 லட்சம் கொடுத்தால் ஒப்பந்தம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பேன் என்றனர். அதன்படி முதல் தவணையாக ரூ.8 லட்சமும், அதன்பின்னர் பாளையங்கோட்டையில் வைத்து ரூ.12 லட்சமும் கொடுத்தேன். பணம் கொடுக்கும் போது எனது நண்பர் பாக்கியராஜ் உடன் இருந்தார்.

    ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்பு அவர்கள் கூறியபடி ஒப்பந்தம் பெற்றுத்தரவில்லை. அதனால் எனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுச் சென்றேன். அப்போது ஒப்பந்தம் குறித்தோ, பணம் குறித்தோ கேட்டு எங்களிடம் வரக்கூடாது எனக் கூறி மிரட்டல் விடுத்தனர். ஆகவே, ஒப்பந்தம் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்ததோடு, மிரட்டலும் விடுத்த மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, லிங்கேஸ்வரதிலகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai