சுடச்சுட

  

  நெல்லை மாவட்டத்துக்கு விரைவில் கையடக்க குடும்ப அட்டை: 8.73 லட்சம் குடும்ப அட்டைகளை இயந்திரத்தில் பதிவு செய்யும் பணி தொடக்கம்

  By திருநெல்வேலி  |   Published on : 06th August 2016 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8.73 லட்சம் குடும்ப அட்டைகளையும் ஸ்மார்ட் கார்டு வடிவில் (கையடக்க அட்டை) வழங்கும் திட்டத்துக்கான முதல் படியாக கணினி இயந்திரத்தில் விவரங்களைப் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

  திருநெல்வேலி மாவட்டத்தில், 1,006 முழுநேர நியாயவிலைக் கடைகள், 443 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,449 கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 755 அரிசி அட்டைகள் உள்பட மொத்தம் 8 லட்சத்து 73 ஆயிரத்து 907 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைகள் அனைத்தையும் கையடக்க குடும்ப அட்டைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல்படியாக, நியாயவிலைக் கடைகளில் கணினி இயந்திரம் பயன்பாடு கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக பாயிண்ட் ஆப் சேல்ஸ் டிவைசஸ் எனும் கருவி, ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

  இந்த இயந்திரத்தில் அந்தந்த கடைகளுக்குரிய அனைத்து குடும்ப அட்டைகளையும் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணியை எளிதில் மேற்கொள்ளும் வகையில் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அந்தந்தப் பகுதி வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வி.கே. புதூர், ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை ஆகிய வட்டங்களைச் சேர்ந்த நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

  இதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி, மானூர், சங்கரன்கேவில் வட்டங்களைச் சேர்ந்த நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பாளையங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில், 120 கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநெல்வேலி, மானூர் வட்டங்களைச் சேர்ந்த 130 கடைகளின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவேங்கடம், சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்த 111 கடைகளைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர். நான்குனேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 85 கடைகளின் பணியாளர்களுக்கும், ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 100 கடைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

  இந்தப் பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் கடைகளில் பராமரிக்கப்படும் அ- பதிவேடு, வழங்கல் பதிவேடு, இருப்பு பதிவேடு, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வந்திருந்தனர். பதிவேடுகளில் உள்ள விவரங்கள் அனைத்தையும் கணினி இயந்திரத்தில் பதிவு செய்யும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி அதன் விவரத்தை இயந்திரத்தில் இணைக்கும் முறை குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

  இதன் தொடர்ச்சியாக, ஒரு வாரத்துக்குள் அந்தந்தக் கடைகளின் குடும்ப அட்டைகள் முழுமையாக இயந்திரத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர், குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் அட்டையைப் பதிவு செய்யும் பணி நடைபெறும். இதன் பிறகு, ஸ்மாட் கார்டு வடிவிலான குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் ஆட்சியர் மு.கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ப. சேகர், கூட்டுறவு மண்டல மேலாளர் சண்முகபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai