பூக்கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு
By திருநெல்வேலி | Published on : 09th August 2016 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாளையங்கோட்டை மார்க்கெட் அருகேயுள்ள பூக்கடைகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகளும், பொதுமக்களும் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பாளையங்கோட்டை நகர பூக்கட்டும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு:
பாளையங்கோட்டை ஜவாஹர் திடல் அருகே 1947ஆம் ஆண்டு முதல் பூக்கடை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு கடையிலும் கிழமேலாக 24 அடியும், தென்வடலாக 6 அடியும் உள்ள கடைகளில் பூக்களைக் கட்டி விற்பனை செய்து வருகிறோம். இதற்காக முறையாக தண்டத் தீர்வை செலுத்தி வருகிறோம். இதன்மூலம் 500 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறது. நாங்கள் அரசு அனுமதியின்றி அத்துமீறி, இப்போதுள்ள கடைகள் உள்ள இடத்தை ஆக்கிரமித்திருக்கவில்லை. ஆகவே, எங்களது கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேகோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் தலைமையில் பெண்கள் பலரும் திரண்டு வந்து மனுக்களை அளித்தனர்.
முதியோர் இல்லம் தேவை: தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகரில் குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோரால் கைவிடப்பட்ட நிலையில் முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் ஆதரவின்றி தவித்து வருகிறார்கள். சிலர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பொது இடங்களில் இறந்து விடும் சூழலும் உள்ளது. ஆகவே, முதியோர்களை பராமரித்து பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் முதியோர் இல்லங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் தேவை: நாம் தமிழர் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:
பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெறுகிறார்கள். இங்கு குளியலறை, கழிவறை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால் நோயாளிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.