Enable Javscript for better performance
பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் மாணவிகள்: ஆட்சியர் அலுவலகத்தில் மனு- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து வசதி இல்லாமல் தவிக்கும் மாணவிகள்: ஆட்சியர் அலுவலகத்தில் மனு

    By திருநெல்வேலி  |   Published on : 09th August 2016 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அருகேயுள்ள பெத்தானியா கிராமத்துக்கு மாலை நேரங்களில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் இரவு வரை காத்திருந்து வீடுகளுக்குச் செல்லும் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். நான்குனேரி வட்டத்துக்குள்பட்ட பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த மாணவர்-மாணவிகள் அளித்த மனு:

    நான்குனேரி வட்டம், சிங்கிகுளம் ஊராட்சிக்குள்பட்ட பெத்தானியா, செல்வபுதுக்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு காலையில் 7 மணிக்கும், மாலையில் 6.30 மணிக்கும் பெத்தானியா-திருநெல்வேலி சந்திப்பு இடையேயான நகரப் பேருந்துகள் இயக்கப்படும். இந்தப் பேருந்துகளில் இந்த இரு ஊர்கள் மட்டுமன்றி இளையாமுத்தூர், திடியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்-மாணவிகளும் பயணித்து திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் செல்வோம்.

    ஆனால், கடந்த சில மாதங்களாக மாலையில் 5.30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து பெத்தானியாவுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து முறையாக இயக்கப்படாததால் இரவு 8.30 மணி வரை மாணவிகள் பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பில் காத்திருந்து ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

    மேலும், அந்த இரவுப் பேருந்தும் இளையாமுத்தூருடன் நிறுத்தப்படுவதால் இருள் சூழ்ந்த வேளையில் அச்சத்தோடு சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு மாணவிகள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்துத் துறையினரிடம் பலமுறை முறையிட்டும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, நகரப் பேருந்துகளை முறையாக இயக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.

    மதகுகளைச் சீரமைக்க கோரிக்கை: பள்ளமடையைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த மனு: பள்ளமடை குளத்தை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்தக் குளத்தில் மொத்தம் 3 மதகுகள் உள்ளன. அதில் ஒரு மதகு தூர்ந்துபோய்விட்டது. 2ஆவது மதகு வாய்க்கால் மிகவும் மோசமாக உள்ளது. 3ஆவது மதகும் பழுதடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இந்தக் குளத்தின் நீராதாரமாகத் திகழும் நெட்டூர் அணைக்கட்டு கால்வாயை சீரமைக்கவும், பள்ளமடை குளத்தின் மதகுகளைச் சீரமைக்கவும் பொதுப்பணித் துறை மூலம் ரூ.1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகவே, மதகுகளை சீரமைக்கவும், தாமிரவருணி நதியில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை உயர்மட்ட கால்வாய் மூலம் மானூர், பள்ளமடை குளங்களுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உதவித்தொகைகோரி மனு: மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.மில்லத் இஸ்மாயில் தலைமையில் குறிச்சிகுளம் மக்கள் அளித்த மனு:

    மானூர் அருகேயுள்ள குறிச்சிகுளம் கிராமத்தில் பேச முடியாத, கேட்க முடியாத மாற்றுத்திறனாளிகள் 30 பேர் உள்ளனர். இதேபோல தெற்குப்பட்டி, எட்டான்குளம், திருமலாபுரம், கம்புக்கடைதெரு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மருந்துகள் வாங்க முடியாமலும், உணவுக்கும் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆகவே, உதவித்தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai