சுடச்சுட

  

  வனவிலங்குகளால் விளைபொருள்கள் சேதம்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

  By திருநெல்வேலி  |   Published on : 10th August 2016 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகள் அட்டகாசம்  செய்வதால், விளைபொருள்கள் சேதமடைந்து இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

  பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட வன அலுவலர் டி. சம்பத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  உதவி வனப் பாதுகாவலர் (பயிற்சி) போஸ்லே சச்சின், வனச்சரக அலுவலர்கள் ஏ.வி. தார்சியுஸ் (திருநெல்வேலி), எம். பாலேந்திரன் (கடையநல்லூர்), செந்தட்டிக்காளை (சிவகிரி), வனவர்கள் செந்தில்குமார், சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள், ஊத்துமலை, புளியரை, புளியங்குடி, செங்கோட்டை, தென்கலம், ஆலங்குளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில் விவசாயிகள் கூறியது: மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழகம், கேரள மாநில எல்கையில் ஸ்ரீமூலப்பேரி அணைக்கட்டு அமைந்துள்ளது. காட்டுக்குள் இருந்து இவ்வழியாக மலையடிவாரத்திற்குள் நுழையும் சிறுத்தைகள் மாடு, நாய் உள்ளிட்டவற்றை அடித்துக் கொன்றுவிடுகின்றன.

  காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பனை, தென்னை மரங்களை சாய்த்து சேதப்படுத்துகின்றன. விளைநிலங்களில் மயில், காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து நெற்பயிர்களை அழித்து வருகின்றன. குரங்குகள் தென்னை மரங்களில் ஏறிச் சேதப்படுத்தி அழிக்கின்றன.

  பூலான்குடியிருப்பு அருகே பட்டுப்பூச்சி பண்ணையிலிருந்து கோட்டைவிளை வரை அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் இருந்து பேட்டரி திருடப்பட்டதால் மின்வேலி சேதமடைந்து, விலங்குகள் எளிதில் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால், 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் போன்ற விளைபொருள்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

  மலையடிவாரப் பகுதியில் கூண்டுகள் வைத்து அட்டகாசம் செய்யும் வன விலங்குகளை பிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

  இதற்கு பதிலளித்த வனத் துறை அதிகாரி, விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகளை கூண்டுவைத்து பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

  மாதந்தோறும் கூட்டம்: விவசாயிகள் பயனடையும் வகையில் மாதந்தோறும் 2ஆவது செவ்வாய்க்கிழமை வனத் துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி, கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற குறைதீர்க்கும் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai