சுடச்சுட

  

  பாரதியார் சிலை வளாகத்தை தூய்மைப்படுத்தக் கோரி போராட்டம்

  By மதி  |   Published on : 13th August 2016 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை வளாகத்தைத் தூய்மைப்படுத்தக் கோரி, பாரதிய ஜனதா கட்சியினர் வெள்ளிக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தூய்மைப் பணி நடைபெற்றது.
  விடுதலைப் போராட்ட வீரர் பாரதியார், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர். அவரை நினைவுகூரும் வகையில் பள்ளியின் அருகில் முழு உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டது. 11-9-1973 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் முன்னிலையில், ஆளுநர் கே.கே.ஷா இச் சிலையைத் திறந்து வைத்தார்.
  பிறந்த நாள், நினைவுநாளில் பாரதியார் சிலைக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவிப்பது வழக்கம். நகரின் மிகவும் பிரதான பகுதியில் இந்த சிலை அமைந்திருப்பதால் அதன் வளாகம் அருகே டிஜிட்டல் பதாகைகளை கட்சியினரும், தனியார் நிறுவனத்தினரும் கட்டி வந்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், காவல்துறையின் சார்பில் சிலையை மறைக்கும் வகையில் பதாகைகள் வைக்க தடை விதித்து எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டது.
  இந்த நிலையில் அந்த சிலை அமைந்துள்ள வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல் குப்பைகள் நிரம்பிக் காட்சியளித்தது.
  சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் விடுதலைப் போராட்ட வீரரின் சிலை வளாகம் பராமரிக்கப்படாததைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமையில் அக் கட்சியினர் வெள்ளிக்கிழமை திடீர் தர்னாவில்  ஈடுபட்டனர். கட்சியின் விவசாய அணி அமைப்பாளர் கணேஷ்குமார்ஆதித்தன், அமைப்புச் செயலர் சுரேஷ் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
  தகவலறிந்ததும் காவல் உதவி ஆணையர் செல்வம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு தூய்மைப் பணிக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து சிலை வளாகம் தூய்மை செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai