Enable Javscript for better performance
"அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பு'- Dinamani

சுடச்சுட

    

    "அதிகாரிகளின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் அதிகரிப்பு'

    By DIN  |   Published on : 15th October 2016 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆணவக் கொலைகள், தற்கொலைகள் போன்றவற்றால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.
    இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலர் ஆர்.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    திருநெல்வேலி மாவட்டத்தில் அண்மையில் கொலை செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சிவகுருநாதன், வீரவநல்லூர் அருகே தற்கொலை செய்த பெண் காவலர் ராமு உள்ளிட்டோர் உயிரிழப்புக்கு அதிகாரிகளின் அலட்சியம் மிகமுக்கிய காரணமாகும். இத்தகைய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பெண்காவலரின் உயிரிழப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட 7 காவல்துறை அதிகாரிகள் பொறுப்பு என்பதை வலியுறுத்தி ஏற்கெனவே அவரது பெற்றோர் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
    சாதிய ஆணவ கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். தலித்கள் உயிரிழப்பு வழக்குகளை முறையாகவும், நேர்மையாகவும் விசாரித்து நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம். இக் கோரிக்கைகளை வலியறுத்தி 20 அமைப்புகளை ஒன்றுதிரட்டி சனிக்கிழமை (அக்.15) திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதன்பின்பும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றார் அவர்.
    பேட்டியின்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் சாகுல்ஹமீது உஸ்மானி, ஒருங்கிணைப்பாளர் பிரபு, முருகன், நவபோதி, சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai