Enable Javscript for better performance
கைகொடுக்குமா வடகிழக்குப் பருவமழை? எதிர்பார்ப்பில் விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    கைகொடுக்குமா வடகிழக்குப் பருவமழை? எதிர்பார்ப்பில் விவசாயிகள்

    By DIN  |   Published on : 15th October 2016 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை முழுமையாகப் பெய்தால் மட்டுமே வறண்ட அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து கிடைக்கும்; பிசான சாகுபடி, குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய தண்ணீர் வழங்க முடியும் என நிலை உருவாகியுள்ளது.
    தாமிரவருணி பாசனத்தில் 2015இல் வடகிழக்குப் பருவத்தில் வழக்கமான அளவைவிடக் கூடுதலாக மழை பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 11 அணைகளும் நிரம்பி உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்ததால், கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    ஆனால், நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை 21 சதவீதம் குறைவாக பெய்ததால் எதிர்பார்த்தவாறு அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. இதனால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நெல், வாழை, சிறுகிழங்கு போன்ற விளைபொருள்கள் கருகின.
    கடந்த 2 மாதங்களாக கோடையை விஞ்சும் வகையில் வெப்பம் நிலவியது. இதுவரை இல்லாத வகையில் அக்டோபர் மாதத்திலும் 102 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் பதிவானதால், பிரதான அணைகள், மானாவாரி, நீர்வரத்துக் குளங்களில் இருந்த தண்ணீர் வேகமாக வற்றியது.
    வற்றாத அணையாக கருதப்படும் பாபநாசம் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து 13 அடி ஆனது. கோடையில்கூட பாபநாசம் அணையில் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்ததில்லை. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை வறண்டு பாளம் பாளமாகக் காணப்படுகிறது.
    இதனிடையே, கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. ஆனால், நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை தொடர்ந்து பெய்யவில்லை என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
    வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீட்டரில்): பாபநாசம் அணை 3, கருப்பாநதி அணை 12, குண்டாறு அணை 8, அடவிநயினார் அணை 5, பாளையங்கோட்டை 38, திருநெல்வேலி 20.2, மூலக்கரைப்பட்டி 4.3, களக்காடு 3.2, நான்குனேரி 14, சிவகிரி 9.2, சங்கரன்கோவில் 4, தென்காசி, செங்கோட்டை தலா 2 மி.மீ.
    பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2.43 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 22 கனஅடி, கடனாநதி அணைக்கு 29 கனஅடி நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 26 அடியாக இருந்தது. மற்ற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
    கவலை அளிக்கும் நீர்இருப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் 13.60 அடி, சேர்வலாறு அணை 46.55 அடி, மணிமுத்தாறு அணை 45.04 அடி, ராமநதி அணை 25 அடி, கருப்பாநதி அணை 24.75 அடி, குண்டாறு அணை 15.12 அடி, அடவிநயினார் அணை 10.75 அடி, வடக்குப் பச்சையாறு 0.25 அடி, நம்பியாறு அணை 9.55 அடி, கொடுமுடியாறு அணை 2 அடியாக இருந்தது.
    பாபநாசம் அணை வறண்டதால் அம்பாசமுத்திரம் வட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊர்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து 200 கனஅடி மட்டுமே திறந்துவிடப்படுவதால் தாமிரவருணியில் நீர்வரத்து குறைந்து குடிநீர்த் திட்டங்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் இம்மாவட்டத்தில் பரவலாக குடிநீர்த் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
    மழை பெய்தால் மட்டுமே அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து கிடைக்கும். பாசனம், குடிநீர் மற்றும் கால்நடைத் தேவைக்கு தண்ணீர் வழங்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
    இந்தச் சூழலில் வடகிழக்குப் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai